கங்கனா ரணாவத்தின் வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை

நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
மொஹாலி விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புடன் மும்பைக்குப் புறப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்.
மொஹாலி விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புடன் மும்பைக்குப் புறப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்.


மும்பை: நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த விவகாரத்தால், நடிகை கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனை கட்சிக்கும் இடையேயான வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. 
இதனிடையே, மும்பையில் கங்கனாவுக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய மாநகராட்சி நிர்வாகம், அதை இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை விசாரணை மேற்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், நடிகை கங்கனாவின் வீட்டை இடிப்பதற்குத் தடை விதித்தது.
மும்பை திரும்பினார்: ஹிமாசல பிரதேசத்திலிருந்து நடிகை கங்கனா புதன்கிழமை பிற்பகல் மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் வீட்டுக்கு அழைத்துச் 
செல்லப்பட்டார். 
கங்கனாவின் வருகைக்கு எதிராக சிவசேனை தொண்டர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில், கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் விமான நிலையத்தின் முன் குவிந்தனர். 
சிவசேனை கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவை கண்டிக்கும் வகையில் கங்கனா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், "என் வீட்டை இடித்து பழி வாங்குவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், உங்கள் (உத்தவ் தாக்கரே) தன்முனைப்பு விரைவில் அழியும். 
என் வீட்டின் எந்தவொரு பகுதியும் சட்டவிரோதமாக கட்டப்படவில்லை. மக்களாட்சியை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. மும்பை நகரமானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் போல் மாறிவிட்டதை என் எதிரிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். 
ராணி லட்சுமிபாயைப் போல் தைரியத்தையும் வீரத்தையும் தொடர்ந்து கடைப்பிடிப்பேன். நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை; யாருக்கும் அடிபணியவும் மாட்டேன். தவறுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்புவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com