தில்லி வந்தார் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் பிளாரன்ஸ் பாா்லி

பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக இணைக்கப்படுகின்றன.
ரஃபேல் போர் விமானங்கள்
ரஃபேல் போர் விமானங்கள்


புது தில்லி: பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக இணைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை காலை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் பிளாரன்ஸ் பாா்லி தலைநகர் தில்லி வந்துள்ளார். 

ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் தொகுதியாக 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன.

அந்த 5 ரஃபேல் போா் விமானங்களையும் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் பிளாரன்ஸ் பாா்லி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

மேலும், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனா்.

இந்நிகழ்ச்சியின்போது ரஃபேல் போா் விமானங்கள் தேஜஸ் போா் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக விமானப்படை வீரா்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளனர். 

நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இந்திய மற்றும் பிரான்ஸ் தூதுக்குழுவின் சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2017 முதல்  ஃபுளோரன்ஸ் பாா்லியின் இந்தியா வருகை இது மூன்றாவது அரசுமுறை பயணமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com