நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்கள்: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது. 
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்கள்: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு


புது தில்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது. 

தேர்வுக்கு நீதிமன்றத்தில் தடை கோருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இப்போது முடிந்து விட்ட காரணத்தால், வருகிற 13-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. 

இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வரும் 13-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், கரோனா பரவும் அச்சம் காரணமாக, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது மேலும் தள்ளிவைக்க வேண்டும் என மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வுக்கு தடை விதிக்கவும், தள்ளி வைக்கவும் மறுப்பு தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் 6 மாநிலங்களின் அமைச்சர்கள் சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையும் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், "நீட் தேர்வுக்கு தடை கோருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டது. சீராய்வு மனுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இப்போது தேர்வு நடத்துவது மட்டும்தான் மிச்சமுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து முடித்துவிட்டனர்' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com