பிரதமரின் மீனவர் அபிவிருத்தித் திட்டம்: இன்று தொடக்கி வைக்கிறார் மோடி

மீனவர்கள் மற்றும் பண்ணைக் குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக பிரதமரின் மீனவர் அபிவிருத்தித் திட்டத்தை (பிஎம்எம்எஸ்ஒய்) பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இணைய வழியில்
பிரதமர் மோடி.
பிரதமர் மோடி.

புது தில்லி: மீனவர்கள் மற்றும் பண்ணைக் குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக பிரதமரின் மீனவர் அபிவிருத்தித் திட்டத்தை (பிஎம்எம்எஸ்ஒய்) பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இணைய வழியில் தொடக்கி வைக்கிறார். மேலும், மீனவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக "இ-கோபாலா' என்ற புதிய செயலியையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார். 
பிகார் மாநிலத்தில் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் நடைபெற்றுவரும் முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் புதன்கிழமை வெளியிடப்பட்ட பிரதமரின் அலுவலகம்  தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: 
பிரதம மந்திரியின் மத்ஸ்ய சம்பத யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டம், நாடு முழுவதும் மீன்வளத் துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பிரதானத் திட்டமாகும். "சுயசார்பு பாரதம்' திட்டத்தின் ஒரு பகுதியாக 2020-21 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 20,250 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நிதி தொகுப்பு மீன்வளத் துறையில் இதுவரை செய்யப்படாத அளவாகும்.  
பிகாரில் தொடங்கப்பட உள்ள மீன்வளத் திட்டத்தில் மொத்த முதலீட்டுத் தொகையான ரூ. 1,390 கோடியில் மத்திய அரசு தனது பங்களிப்புத் தொகையாக ரூ. 535 கோடியை  முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் கூடுதலாக 3 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், பிகார் அரசிந் திட்டத்துக்கு மட்டும் ரூ. 107 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், சீதாமாரி பகுதியில் மீன் குஞ்சுகள் அடைகாக்கும் வங்கி அமைப்பது குறித்தும், கிஷன்கஞ்சில் நீர்வாழ் உயிரினங்களின் நோய் ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை அமைப்பது குறித்தும் பிரதமர் மோடி அறிவிக்கிறார். இவை பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தில் செயல்பட உள்ளன.
இந்த வசதிகளை மீன் உற்பத்தியாளர்களுக்கு  ஏற்படுத்தித் தருவதன் மூலம் தரமான, மலிவான விலையில் மீன் குஞ்சுகளை சரியான நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன் மூலம் மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் கண்டறிதல் மற்றும் நீர் மற்றும் மண் பரிசோதனை வசதிகளின் தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும். 
மேலும் "இ-கோபாலா' என்ற செயலியை அறிமுகம் செய்வதன் மூலமாக, மீனவர்களும், பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் சந்தைப்படுத்தல் தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இந்த செயலியையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார். 
மேலும், பிகார் மாநிலம், பூசாவில் உள்ள டாக்டர் ராஜேந்திரபிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த மீன் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com