ராணுவ தொழிலகங்களில் சீர்திருத்தம் தேவை

பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆயுதத் தொழிற்சாலைகளிலும் தர மேம்பாட்டை இலக்காகக் கொண்ட சீர்த்திருத்தங்கள் அவசியம் என்று முப்படைத் தளபதி விபின் ராவத்
ராணுவ தொழிலகங்களில் சீர்திருத்தம் தேவை


புது தில்லி: பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆயுதத் தொழிற்சாலைகளிலும் தர மேம்பாட்டை இலக்காகக் கொண்ட சீர்த்திருத்தங்கள் அவசியம் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். 
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) நடத்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று விபின் ராவத் பேசியதாவது: 
இந்திய ராணுவ ஆயுதத் தொழிலகங்களையும், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தர அடிப்படையில் மேம்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். பிற நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் பல தடைகள் உள்ள நிலையில், நமக்குத் தேவையான தளவாடங்களை  நாமே தயாரிப்பது அவசியமாகி உள்ளது. அது மட்டுமல்லாது, ஆயுதங்களைத் தயாரிக்க இயலாத நாடுகளுக்கு தரமான தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் முடியும். 
பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், இத்துறையின் வளர்ச்சி பல மடங்காகப் பெருகி வருகிறது. அதற்கேற்றவாறு நமது ராணுவத் தொழிலகங்களிலும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும்,  நவீனமயமாக்கமும், தரக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதும் அவசியம். அதற்கு தொழிலகங்களை பெருநிறுவனமாக்குவதும் ஒரு வழியாகும். 
அண்மைக்காலமாக நமது ராணுவத் தளவாட ஏற்றுமதி 700 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2016- 17-இல் ரூ. 1,500 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி மதிப்பு, 2018- 19-இல் ரூ. 10,745 கோடியாக உயர்ந்துள்ளது. 
இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், தளவாடங்களைப் பயன்படுத்தி வெல்லவே விரும்புகிறது. அதுமட்டுமல்ல, நமது தரமான தளவாடங்களை தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இயலும். இதற்கு தனியார் துறையிலிருந்து பெருமளவு முதலீடு தேவைப்படுகிறது. 
உலக அளவில் ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கிறது. அந்தச் செலவினத்தை முழுமையாக ஆராய்ந்து தேவையான மாற்றங்களைச் செய்வதும் அவசியமாகும். நமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும்போது இந்தச் செலவினம் குறையும் என்றார் விபின் ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com