தென்னிந்தியாவின் முதல் கிஸான் ரயில் ஆந்திரத்தில் இருந்து தில்லிக்கு பயணம்

வேளாண் பொருள்களை ஏற்றிச்செல்லும் வகையிலான கிஸான் ரயில், நாட்டில் 2ஆவது முறையாகவும், தென்னிந்தியாவில் முதல் முறையாகவும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு தொடக்கி வைக்கப்பட்டது. 

அமராவதி / புது தில்லி: வேளாண் பொருள்களை ஏற்றிச்செல்லும் வகையிலான கிஸான் ரயில், நாட்டில் 2-ஆவது முறையாகவும், தென்னிந்தியாவில் முதல் முறையாகவும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. 

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்தர சிங் தோமர், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இந்த ரயிலை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். 

14 பெட்டிகளில் 322 டன் பழங்களுடன் தொடர்ந்து 40 மணி நேரமும், 2,150 கி.மீ. தூரமும் பயணித்து கிஸான் ரயில் தில்லிக்கு வந்தடைகிறது. இதில் உள்ள பழங்கள் ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான ஆஸாத்பூர் மண்டியில் விற்பனை செய்யப்படுகின்றன. 

தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் தோமர், "நிகழாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கிஸான் ரயில், உடான் ரயில் ஆகியவை விவசாய பொருள்களை குறைந்த விலையில் நாடு முழுவதும் சந்தைப்படுத்த உதவும். ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பழங்கள், காய்கறிகள் 2 லட்சம் ஹெக்டரில் விளைவிக்கப்படுகின்றன. இவை கிஸான் ரயிலில் சந்தைகளுக்கு கொண்டு செல்வதால் விவசாயிகள் லாபமடைவார்கள். அவர்களுக்கு விவசாய உடான் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். கிஸான் ரயில் செல்லும் வழியில் உள்ள விவசாயிகளும் பயன் பெறும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், "தக்காளி, தேங்காய், பப்பாளி, மிளகாய் ஆகியவற்றை நாட்டிலேயே அதிக அளவில் விவசாயம் செய்யும் மாநிலமாக ஆந்திரம் உள்ளது. தென் இந்தியாவில் அதிக பழங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் ஆந்திரம்  உள்ளது' என்றார். 

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பேசுகையில், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக இந்த விவசாய ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அந்த பகுதிகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களை அனுப்பலாம்' என்றார். 

நாட்டின் முதல் கிஸான் ரயில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தேவலாலியில் இருந்து பிகார் மாநிலம் தானாபூருக்கு தொடக்கி
வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com