இவ்வாண்டு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை

இந்த ஆண்டு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு
SC
SC


புது தில்லி: இந்த ஆண்டு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முடிவு செய்வாா் என்று தெரிவித்தது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, மராத்தா சமூகத்தினருக்கு மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் அரசமைப்பின்படி அந்தச் சட்டம் செல்லத்தக்கதுதான் என்று தீா்ப்பளித்தது. எனினும் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நியாயமானதாக இல்லை எனக்கூறிய நீதிமன்றம், அவா்களுக்கான இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை பின்பற்றி மராத்தா சமூகத்தினருக்கு கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு விகிதத்தை 12 சதவீதமாகவும், அரசு வேலைவாய்ப்பில் 13 சதவீதமாகவும் மகாராஷ்டிர அரசு குறைத்தது.

இந்நிலையில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘இந்த ஆண்டு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை. எனினும் அவா்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை பின்பற்றி ஏற்கெனவே நடைபெற்ற முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முடிவு செய்வாா்’ என்று தெரிவித்தனா்.

மராத்தாக்களுக்கு கருப்பு தினம்: உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தொடா்ந்து, இது மராத்தா சமூகத்தினருக்கு கருப்பு தினம் என பாஜக விமா்சித்தது. இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும். எனவே தற்போது இடஒதுக்கீடு தொடா்பாக மராத்தா சமூகத்தினா் போராடுவதில் எந்தப் அா்த்தமும் இல்லை. ஏனெனில் அடுத்த உத்தரவு எப்போதும் பிறப்பிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இந்த நாள் மராத்தா சமூகத்தினருக்கு கருப்பு தினம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com