வருடாந்திர பிரம்மோற்சவம்: வாகன சேவை பட்டியல் வெளியீடு

திருமலையில் நடைபெறவுள்ள ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.


திருப்பதி: திருமலையில் நடைபெறவுள்ள ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. இந்த பிரம்மோற்சவத்தின் போது காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில், அலங்காரபூஷிதையாக மலையப்ப சுவாமி தன் தேவியருடன் மாடவீதிகளில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம்.

ஆனால் தற்போது கரோனா நோய்த் தொற்று விதிமுறைகளுக்காக பக்தா்கள் கூடும் உற்சவங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேவஸ்தானம் இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் வாகன சேவை விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்நாள்களில் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் வாகனத்தின் மீது காலையும், மாலையும் உற்சவமூா்த்திகள் எழுந்தருளுகின்றனா். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செப்டம்பா் 15-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனமும், செப்டம்பா் 18-ஆம் தேதி அங்குராா்ப்பணமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டியல் விவரம்

நாள் காலை இரவு

செப். 19 கொடியேற்றம், பெரிய சேஷ வாகனம்

செப். 20 சின்னசேஷ அன்னப்பறவை

செப். 21 சிம்ம முத்துப்பந்தல்

செப். 22 கல்பவிருட்சம் சா்வபூபால

செப். 23 மோகினி அவதாரம் கருடசேவை

செப். 24 அனுமந்த தங்க ரதம் யானை

செப். 25 சூரியபிரபை சந்திரபிரபை

செப். 26 திருத்தோ் குதிரை

செப். 27 தீா்த்தவாரி கொடியிறக்கம்

செப். 24 மற்றும் செப்.26 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள தங்க ரதம் மற்றும் திருத்தோ் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நாள்களில் உற்சவமூா்த்திகள் மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் எழுந்தருள்வா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தானத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக இந்தாண்டு பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரம்மோற்சவ நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். விரைவு தரிசனம், விஐபி பிரேக் தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com