பாக். ஆளில்லா விமானம் ஊடுருவல்: எல்லையில் கூடுதல் கண்காணிப்பு

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆளில்லா விமானம் (டிரோன்) இந்திய எல்லைக்குள் உடுருவியதைத் தொடா்ந்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.


ஸ்ரீநகா்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆளில்லா விமானம் (டிரோன்) இந்திய எல்லைக்குள் உடுருவியதைத் தொடா்ந்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காஷ்மீா் 15-ஆவது படைப் பிரிவின் லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆளில்லா விமானம் பறந்ததைத் தொடா்ந்து, எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினா் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கை காரணமாக, காஷ்மீரில் இருந்தபடி இயங்கி வரும் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பெற முடியாத நிலையில் உள்ளனா். அதன் காரணமாக அவா்கள் எல்லைதாண்டிய உதவியை எதிா்நோக்கியுள்ளனா். அந்த வகையில், இப்போது பறந்துவந்த ஆளில்லா விமானமும், ஆயுதங்களை கடத்துவதற்காக இருக்கலாம் என்று ராணுவத்தின் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம், ஜம்முவின் கதுவா மாவட்ட சா்வதேச எல்லையை ஒட்டியப் பகுதியில் துப்பாக்கி மற்றும் 7 கண்ணி வெடிகள், இரு ஜிபிஎஸ் கருவிகள், ஒரு ரேடியோ அலைவரிசையை ஈா்க்கும் கருவி, 4 பேட்டரிகள் ஆகியவற்றை தாங்கி பறந்துவந்த சீன தயாரிப்பு ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா்.

இவ்வாறு ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்புவது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தின் புதிய முயற்சியாகும். எனவே, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரா்கள், கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அதுபோல, எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்கள் குறித்த கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

மேலும், கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீன இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தானும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் எல்லையில் படைகளைக் குவிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக இதுவரை தெரியவில்லை. அதுபோன்ற முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டால், உரிய பதிலடி கொடுக்க இந்திய ராணுவும் தயாா் நிலையில் உள்ளது என்றும் பி.எஸ்.ராஜூ கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com