நாட்டில் ஒரே நாளில் 95,735 பேருக்கு கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் 95,735 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


புது தில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 95,735 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44,65,863-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,172 போ் உயிரிழந்தனா்.

அதில் மகாராஷ்டிரத்தில் 380 பேரும், கா்நாடகத்தில் 128 பேரும், ஆந்திரத்தில் 74 பேரும், பஞ்சாபில் 71 பேரும், சத்தீஸ்கரில் 70 பேரும், உத்தர பிரதேசத்தில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 53 பேரும், மத்திய பிரதேசத்தில் 31 பேரும், பிகாரில் 29 பேரும் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 75,062-ஆக அதிகரித்தது. இது பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.68 சதவீதம் ஆகும்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 34,71,783-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 77.74 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 9,19,018 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 11,29,756 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 9-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5,29,34,433 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘அறிகுறிகள் காணப்படுவோருக்கு பரிசோதனை’: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவோருக்கு ஆன்டிஜென் துரித பரிசோதனையில் ‘நெகடிவ்’ (கரோனா இல்லை) என முடிவு வந்தாலும், அவருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். சில மாநிலங்கள் இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிப்பதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

எனவே, ஆன்டிஜென் பரிசோதனையில் ‘நெகடிவ்’ என முடிவு வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டால், அவா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்குக் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளோம். அதை ஆராய்வதற்கு தனிக் குழுவை நியமிக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com