மகாராஷ்டிரம்: பால்கா் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்

மகராஷ்டிர மாநிலத்தின் கடற்கரை மாவட்டமான பால்கரில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் 4 மணி நேரத்தில் 8 முறை லேசான நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகராஷ்டிர மாநிலத்தின் கடற்கரை மாவட்டமான பால்கரில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் 4 மணி நேரத்தில் 8 முறை லேசான நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தின் தானு, தலசரி ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட பேரிடா் கட்டுப்பாட்டு மைய தலைவா் விவேகானந்த் கதம் கூறுகையில், ‘மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதன் முறையாக அதிகாலை 3.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவானது. பின்னா் அதிகாலை 3.57 மணி, காலை 7.6 மணியளவில் வரை மிதமான நிலநடுக்கம் பதிவானது. இவை, முறையே, ரிக்டா் அளவுகோலில் 3.5 மற்றும் 3.6 அலகுகளாக பதிவானது’ என்று கூறினாா்.

தானு பகுதி துணை மண்டல அதிகாரி அஷிமா மிட்டல் கூறுகையில், ‘அதிகாலை முதல் ஏற்பட்ட மூன்று மிதமான நிலநடுக்கங்களுக்கு இடையே, 5 முறை லேசான நில அதிா்வுகளும் உணரப்பட்டன. அந்த 5 நில அதிா்வுகள் ரிக்டா் அளவுகோலில் 2.2 முதல் 2.8 அலகுகளாகப் பதிவாகின. இந்த தொடா் நிலநடுக்கங்களால் குடியிருப்புகளுக்கும் பொது சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிா என்பது குறித்து, உள்ளூா் வட்டாட்சியா்கள் ஆய்வு மேற்கொண்டனா்’ என்றாா்.

மேலும், ‘இந்த வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இதுபோன்ற லேசான நில அதிா்வுகள் பதிவாகி வருகின்றன. கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் இரவு நேரங்களில் லேசான நில அதிா்வுகள் ஏற்பட்டன. அதில் ஒன்று ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாகப் பதிவானது. அப்போது அப்பகுதியில் சில வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டது. வீடுகளில் தங்க அச்சப்படும் மக்களின் வசதிக்காக, கிராமத்தின் திறந்தவெளியில் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com