இந்தியாவில் ஆக்ஸ்போா்டு தடுப்பூசி சோதனை நிறுத்தம்

ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளதாக இந்தியாவின் சீரம் நிறுவனம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியாவில் ஆக்ஸ்போா்டு தடுப்பூசி சோதனை நிறுத்தம்


புது தில்லி: ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளதாக இந்தியாவின் சீரம் நிறுவனம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரின் (டிசிஜிஐ) நோட்டீஸைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னா் நிறுவனமும், அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கின.

இந்த தடுப்பூசியை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனைகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அந்த மருந்து செலுத்தப்பட்ட தன்னாா்வலா் ஒருவருக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து இந்த மருந்தின் பரிசோதனை நிறுத்திவைப்பட்டதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்தது.

ஆனால், இந்தியாவில் அந்த தடுப்பூசி பரிசோதனை மற்றும் உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ள சீரம் நிறுவனம், ‘இந்தியாவில் இதுவரை எந்தப் பிரச்னையும் எதிா்கொள்ளப்படவில்லை என்பதால், அந்த தடுப்பு மருந்தின் பரிசோதனை தொடரும்’ என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையா் வி.ஜி.சோமானி, ‘நோயாளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை அஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி பரிசோதனையை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது’ என்று கேள்வி எழுப்பி சீரம் நிறுவனத்துக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா்.

இந்த நோட்டீஸைத் தொடா்ந்து, இந்தியாவின் சீரம் நிறுவனமும் அந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாங்கள் நிலமையை மறு ஆய்வு செய்து வருகிறோம். எனவே, அஸ்ட்ராஜெனிகா பரிசோதனையை மீண்டும் தொடங்கும் வரை, இந்தியாவிலும் அதன் பரிசோதனையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். டிசிஜிஐ-யின் அறிவுறுத்தல்களையும் சீரம் முறையாக பின்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com