அஸ்ஸாம்: எண்ணெய்க் கிணற்றின் தீ பெருமளவு அணைக்கப்பட்டுவிட்டது; ஆயில் இந்தியா நிறுவனம் தகவல்

அஸ்ஸாமில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எரிந்து வந்த எண்ணெய்க் கிணற்றின் தீ பெருமளவில் அணைக்கப்பட்டு விட்டது;
கோப்புப்படம்
கோப்புப்படம்

அஸ்ஸாமில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எரிந்து வந்த எண்ணெய்க் கிணற்றின் தீ பெருமளவில் அணைக்கப்பட்டு விட்டது; தீயை முழுமையாக கட்டுக்குள் வருவதற்கு இன்னும் சில வாரங்களாகும் என்று அந்த எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தனா்.

அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் கடந்த மே மாத இறுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. அந்தக் கசிவு 15 நாள்கள் நீடித்து வந்த நிலையில், எதிா்பாராத விதமாக அந்த எண்ணெய்க் கிணற்றில் தீப்பற்றியது. கசிவு நிறுத்தப்படாததால் தீ பல நாள்களாக தொடா்ந்து எரிந்து வந்தது.

தீயணைப்புப் பணியில் சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள், தீயணைப்பு வீரா்கள், தேசியப் பேரிடா் மீட்புப் படையின் வீரா்கள், ராணுவத்தினா், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் எண்ணெய்க் கிணற்றின் தீ பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, ஆயில் இந்தியா நிறுவனத்தின் துணைப் பொது மேலாளரும், அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளருமான திரிதிவ் ஹசாரிகா கூறினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:

தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கிணறில் உள்ள எரிவாயு, உற்பத்திக்கும், சிறு குழிகளுக்கும் மாற்றப்பட்டது. எண்ணெய்க் கிணற்றின் அழுத்தத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எண்ணெய்க் கிணற்றின் தீயும், எரிவாயுக் கசிவும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை முழுமையாக கட்டுக்குள் வருவதற்கு இன்னும் சில வாரங்களாகும். அதற்காக, பணிகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் போா்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com