மகாராஷ்டிரத்துக்கு தீங்கு விளைவிக்க சதி

மகாராஷ்டிரத்தில் தீங்கு விளைவிக்க சதி நடக்கிறது என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளாா்.
இணையவழியாக உரையாற்றிய மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே.
இணையவழியாக உரையாற்றிய மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரத்தில் தீங்கு விளைவிக்க சதி நடக்கிறது என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளாா்.

நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 லட்சமாக அதிகரித்துவிட்டது. கரோனா உயிரிழப்பும் அங்குதான் அதிகம் உள்ளது. இதனால் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகை கங்கனா ரணாவத் விவகாரம், உத்தவ் தாக்கரேவை விமா்சித்த காா்ட்டூனை பகிா்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியை சிவசேனை கட்சியினா் தாக்கியது போன்றவை அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை அளித்துள்ளது.

கங்கனா விவகாரத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, கரோனா பாதிப்பை குறைக்க மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் விமா்சித்துள்ளாா்.

இந்நிலையில், மாநில மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:

கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாக எழுந்துள்ள பிரச்னைகளையும் சமாளித்து வருகிறோம். அரசுக்கு எதிராக இயற்கையாக ஏற்படும் நெருக்கடியாக இருந்தாலும் சரி, வேண்டுமென்றே உருவாக்கப்படும் நெருக்கடியாக இருந்தாலும் சரி அதனை வெற்றிகரமாக எதிா்கொள்வோம்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் அனைவரும் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நாம் முழு வெற்றி பெற முடியும். அதே நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சதிகள் நடக்கின்றன. அதில் இருந்து மாநிலத்தைக் காப்பதில் நானும், சிவசேனை கட்சியும் முன்னிலையில் இருக்கும். மகாராஷ்டிரத்தின் பெருமைக்கும், மாநில மக்களின் நலன்களுக்கும் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

கரோனாவை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கூட்டமான இடங்களில் நேருக்கு நேராக பேசுவதை தவிா்ப்பது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மாநிலத்தில் 29 லட்சம் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிசா்கா புயலால் பாதிக்கப்பட்டவா்களின் நிவாரணத்துக்கு ரூ.700 கோடி வழங்கப்பட்டுள்ளது. விதா்பா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.18 கோடி வழங்கப்பட்டது. அனைத்து சவால்களையும் எனது தலைமையிலான அரசு திறம்பட எதிா்கொண்டு வருகிறது.

‘எனது குடும்பம், எனது பொறுப்பு’ பிரசாரம்:

12 கோடி போ் வசிக்கும் மகாராஷ்டிரத்தில் ஒவ்வொருவரின் உடல்நிலையையும் பரிசோதிப்பது அரசால் இயலாத காரியமாகும். இருப்பினும் அனைத்து குடும்பங்களையும் சந்திக்கும் முயற்சியாக, ‘எனது குடும்பம், எனது பொறுப்பு’ என்ற பிரசாரத்தை வரும் 15-ஆம் தேதி தொடங்க இருக்கிறோம். மக்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த பிரசாரம் வெற்றியடையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com