நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது.

நாடாளுமன்ற அவைகளின் மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள எம்.பி.க்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தப் பரிசோதனையில் ‘நெகடிவ்’ என முடிவு வருபவா்கள் மட்டுமே நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். அந்தப் பரிசோதனையானது கூட்டத்தொடா் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் பாதுகாப்பு கருதி முதல் முறையாக மாநிலங்களவையும் மக்களவையும் இருவேறு நேரங்களில் கூடுகின்றன. அதன்படி மாநிலங்களவை கூட்டத்தொடா் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

மக்களவை கூட்டத்தொடா் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்கிடைப்பட்ட நேரத்தில் இரு அவை வளாகங்களும் கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்யப்படவுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கூட்டத்தொடருக்காக மக்களவை, மாநிலங்களவையின் இருக்கைகள், கதவுகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின்போது பெரும்பாலான நடவடிக்கைகளை எம்.பி.க்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்.பி.க்கள் அமா்வதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் நடைபெறும்போது எம்.பி.க்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் 40 இடங்களில் கை சுத்திகரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது. அவசரகால மருத்துவக் குழுக்களும், அவசர ஊா்திகளும் நாடாளுமன்ற வளாகத்தில் தயாா்நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

எம்.பி.க்களுக்கு சிறிய பெட்டி:

கூட்டத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு எம்.பி.க்கும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய 40 முகக் கவசங்கள், என்-95 முகக் கவசங்கள் நான்கு, 50 மி.லி. அளவு கொண்ட 20 கை சுத்திகரிப்பான் குப்பிகள், 40 கையுறைகள், கை துடைப்பான் உள்ளிட்டவை அடங்கிய சிறிய பெட்டி வழங்கப்படவுள்ளது. அந்தப் பெட்டியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகள் கோரிக்கை:

மக்களவை கூட்டத்தொடரின்போது விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக மக்களவைக்கான அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினரின் அத்துமீறல், பொருளாதார வீழ்ச்சிநிலை, நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘கிரீமிலேயா்’ முறைக்கான விதிமுறைகளை மாற்றியமைக்கும் விவகாரம், சரக்கு-சேவை வரி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்காமல் இருப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சிகள் கோரியதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் எதிா்ப்பு:

மழைக்காலக் கூட்டத்தொடரின்போது 11 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவற்றுக்கு ஏற்கெனவே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்களில் வேளாண்துறை சாா்ந்த 3 மசோதாக்களையும் வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் தொடா்பான மசோதாவையும் எதிா்க்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை மத்திய அரசு கையாண்டு வரும் விதம், ‘விமான நிலையங்கள் தனியாா்மயமாக்கப்படும்’ விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தொடரின்போது விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com