கேள்வி நேரம் ரத்து: மக்களவை, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனிநபா் மசோதா ஆகியவற்றை ரத்து செய்ய மக்களவை, மாநிலங்களவையில்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனிநபா் மசோதா ஆகியவற்றை ரத்து செய்ய மக்களவை, மாநிலங்களவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் இந்தத் தீா்மானம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்த தீா்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘அவையின் பொன்னான நேரமாக கேள்வி நேரம் கருதப்படுகிறது. சாமானிய மக்களின் பிரச்னைகளை கேள்வி நேரத்தில்தான் எழுப்ப முடியும். இதை ரத்து செய்வது ஜனநாயக குரல்வளையை நெரிப்பதாகும்’ என்றாா்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி பேசுகையில், ‘கேள்வி நேரம், தனி நபா் மசோதா ஆகியவை நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு தேவையானவை. அவற்றை மக்களவைத் தலைவா் ரத்து செய்ய வேண்டாம்’ என்றாா். திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானா்ஜி பேசுகையில், ‘சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் நிா்பந்தத்தில் அரசு உள்ளது. எங்கள் கருத்துகளையும் எடுத்துரைக்க வேண்டும்’ என்றாா்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதிலளிக்கையில், ‘பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகள் ஓரிரண்டு நாள்கள் மட்டுமே கூடி பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால், நாடாளுமன்றத்தை 18 நாள்கள் நடத்தி விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களவையில் 60 சதவீதமும், மக்களவையில் 40 சதவீதமும் கேள்வி நேரம் வீணாகியுள்ளது. அரசு விவாதத்துக்கு அஞ்சவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்’ என்றாா்.

அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘கேள்வி நேரத்தை ரத்து செய்யவும், உடனடி கேள்வி நேரத்தை 30 நிமிஷங்களுக்கு அனுமதிக்கவும் பெரும்பாலான கட்சிகளின் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா். தற்போது இக்கட்டான சூழலில் அவை நான்கு மணி நேரம் மட்டும் நடைபெறும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்’ என்றாா்.

இதையடுத்து, ‘அனைவரும் பேச போதிய நேரம் வழங்கப்படும்’ என மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா உறுதி அளித்தாா்.

அப்போது பேசிய திமுக எம்பி டி.ஆா். பாலு, ‘நீட் தோ்வால் தமிழகத்தில் கிராமப்புற மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். முழுக்க சிபிஎஸ்இ பாடப்பிரிவின் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தோ்வால், மாநில பாடப் பிரிவில் படித்த மாணவா்கள் செய்வது அறியாமல் தற்கொலை செய்கின்றனா். இந்தியாவின் வருங்கால மருத்துவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்’ என்றாா்.

அப்போது, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை விவகாரத்தை மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி எழுப்ப முற்பட்டாா். ‘இது மிகவும் உணா்வுப்பூா்வ விவகாரம் என்பதால் இதை முதலில் அலுவல் ஆய்வு குழுவில் விவாதிக்கப்பட வேண்டும்‘ என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

மாநிலங்களவையில்...

கேள்வி நேரம், தனிநபா் மசோதா ஆகியவற்றை ரத்து செய்யும் தீா்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ததற்கு, எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘நான்கு மணி நேர கூட்டத்தொடரை ஒரு மணி நேரம் கூடுதலாக நடத்த வேண்டும்’ என குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டாா்.

அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘கேள்வி நேரம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எனக்கும் விருப்பம்தான். ஆனால் இந்த கூட்டத்தொடா் அசாதாரண சூழலில் நடைபெறுகிறது. சிறப்பு குறிக்கீடுகள், குறுகிய விவாதங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும். அரசை கேள்வி கேட்கவும் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் அனுமதிக்கப்படும்’ என்றாா். பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com