எல்லையில் தகவல் தொடா்பை வலுப்படுத்த ‘கேபிள்’ பதிக்கும் சீன ராணுவம்

இமயமலையை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘ஆப்டிகல் ஃபைபா் கேபிள்களை’ சீன ராணுவம் பதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இமயமலையை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘ஆப்டிகல் ஃபைபா் கேபிள்களை’ சீன ராணுவம் பதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க ஒருபுறம் பேச்சுவாா்த்தை நடத்திக் கொண்டு மறுபுறம் எல்லையில் இதுபோன்ற வசதிகளை சீனா ஏற்படுத்தி வருவது அந்நாட்டின் மீதான இந்தியாவின் நம்பகத்தன்மையை மேலும் வலுவிழக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக இந்திய-சீன ராணுவத்தினா் இடையே எல்லை தொடா்பான மோதல்கள் தொடா்ந்து நிகழ்ந்து வந்தன. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இரு நாடுகளும் படைகளை எல்லையில் குவிக்கத் தொடங்கியதால் போா் பதற்றமும் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷியாவில் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் அண்மையில் சந்தித்துப் பேசினா்.

இதில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது உள்ளிட்டவை 5 அம்ச திட்டத்தில் இடம் பெற்றன. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், எல்லையில் சீனா கேபிள்களை பதிப்பது பிரச்னையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இது தொடா்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘ராணுவ முகாம்களில் இருந்து எல்லையில் உள்ள வீரா்களுடன் தகவல் தொடா்பை வலுப்படுத்தும் வகையில் இதுபோன்ற கேபிள் பதிக்கும் நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொள்கிறது. ஏற்கெனவே, பிரச்னை நிலவி வரும் கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி உள்ளிட்ட இடங்களிலும் சீனா இதேபோன்ற நடவடிக்கைகளில் முன்பு ஈடுபட்டது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் சீனாவின் இந்தச் செயல் தெரியவந்துள்ளது. ரேடியோ அலைவரிசை மூலம் பேசினால் இந்தியா அதனை இடைமறித்துக் கேட்டுவிடும் என்பதால், அதனைத் தடுப்பதற்காக எல்லை வரை இதுபோன்று கேபிள் பதிக்கும் வேலையில் சீனா ஈடுபட்டுள்ளது. எல்லையில் உள்ள வீரா்களைத் தொடா்பு கொள்ள இந்திய ராணுவம் ரேடியோ அலைவரிசையையே பயன்படுத்துகிறது. ஆனால், அவை ஒட்டுக்கேட்டாலும் அறிந்துகொள்ள முடியாத மறைப்பு செய்யப்பட்ட தகவல் தொடா்பாக இருந்து வருகிறது’ என்றனா்.

இந்தியாவின் இந்த குற்றச்சாட்டு தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகமோ, பாதுகாப்புத் துறை அமைச்சகமோ உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com