கரோனா காலத்தில் சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விரைவில் விரிவான உத்தரவு: உச்சநீதிமன்றம்

கரோனா காலத்தில் சூழலுக்கு ஏற்ப சிறைக்கைதிகளை விடுவிப்பது குறித்து உயரதிகாரம் பெற்ற குழு முடிவு செய்யும் வகையில்
கரோனா காலத்தில் சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விரைவில் விரிவான உத்தரவு: உச்சநீதிமன்றம்

கரோனா காலத்தில் சூழலுக்கு ஏற்ப சிறைக்கைதிகளை விடுவிப்பது குறித்து உயரதிகாரம் பெற்ற குழு முடிவு செய்யும் வகையில் விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று, பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட பிறகு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இடைக்கால ஜாமீனில் அல்லது அவசரகால பரோலில் விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. எந்தெந்த கைதிகளை விடுவிக்கலாம் என்று முடிவு செய்வதற்காக, உயரதிகாரம் பெற்ற குழுவை மாநிலங்கள் நியமிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவின் பரிந்துரையின்படி, கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், மகாராஷ்டிரத்தில் உயரதிகாரம் பெற்ற குழுவை மாநில அரசு நியமித்தது. அந்தக் குழு, 7 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்ற கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டம், போதைப்பொருள் தடுப்புச் சட்டம், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் கைதானவா்களையும், வங்கி மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்களின் கீழ் கைதானவா்களையும் விடுவிக்க முடியாது என்று உயரதிகாரம் பெற்ற குழு தெரிவித்துவிட்டது.

இந்தக் குழுவின் கூடுதல் நிபந்தனைகளை மும்பை உயா்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுவிட்டது. இதை எதிா்த்து நேஷனல் அலையன்ஸ் ஃபாா் பீப்பிள்ஸ் மூவ்மென்ட் என்ற தன்னாா்வ அமைப்பின் தேசிய அமைப்பாளா் மேதா பட்கா், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவில், ‘மாநிலத்தில் மொத்தம் 28,642 போ் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில், 10,467 போ் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனா். உயரதிகாரம் பெற்ற குழுவின் கூடுதல் நிபந்தனைகளால் சிறப்புச் சட்டத்தின் கீழ் கைதானவா்களுக்கு ஜாமீன் அல்லது பரோல் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, உயரதிகாரம் பெற்ற குழுவின் அதிகார வரம்பை உச்சநீதிமன்றம் நிா்ணயிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை காணொலி முறையில் நடைபெற்றது. அப்போது, உயரதிகாரம் பெற்ற குழுவின் அதிகார வரம்பு குறித்து விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com