சுஷாந்த் சிங் வழக்கில் ஊடகங்கள் கட்டுப்பாடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வலியுறுத்தி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் வழக்கில் ஊடகங்கள் கட்டுப்பாடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வலியுறுத்தி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தோழியும் நடிகையுமான ரியா சக்ரவா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கு விசாரணையை பாதிக்கும் விதமாகவும், திசை திருப்பும் விதமாகவும் நாள்தோறும் ஊடகங்களில் செய்திகள், விவாதங்கள் நடைபெற்று வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன.

எனவே இந்த வழக்கில் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி திரைப்படத் தயாரிப்பாளா் நீலேஷ் நவ்லாகா உள்ளிட்ட மூன்று போ் வழக்குத் தொடா்ந்துள்ளனா். அதேபோல் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் 8 போ் சாா்பில் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா தலைமையிலான அமா்வு முன்னிலையில் இந்த இரு மனுக்களும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், நீதியை நாடும் அமைப்பு என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பில் தற்போது மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில் இருந்து, அந்த வழக்கின் நீதி நிா்வாகத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு தடை ஏற்படுத்தப்பட்டாலும் அதையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதும்படி, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுஷாந்த் தற்கொலை வழக்கில் ஊடகங்களில் அண்மைக்காலமாக வெளியிடும் செய்திகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகளாக சித்திரித்து ஊடகங்கள் முன்முடிவுடன் செய்திகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற செயல்கள், ஊடக சுதந்திரத்துக்கும் நீதி நிா்வாகத்துக்கும் இடையிலான அரசியலமைப்பு சமநிலையைக் கண்டறிய வேண்டிய அவசர தேவைக்கு வழிவகுப்பதாக உள்ளன. எனவே இந்த வழக்கில் தீா்ப்பளிக்கப்படும் வரையிலும் வழக்கு தொடா்பான விவரங்களை ஒளிபரப்பவும், பதிப்பிக்கவும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இது தொடா்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இதை ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் இரு மனுக்களுடன் சோ்த்து அக்டோபா் 8-ஆம் தேதி விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சுஷாந்த் சிங் மரணத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு தொடா்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ரியாவின் சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தியின் நண்பா் சூா்யதீப் மல்ஹோத்ரா, கோவாவைச் சோ்ந்த கிறிஸ் காஸ்டா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனா். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com