பிஎம்-கிஸான்: மூன்று மாதங்களில்ரூ.38,282 கோடி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

பிஎம்-கிஸான் திட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது 
பிஎம்-கிஸான்: மூன்று மாதங்களில்ரூ.38,282 கோடி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

பிஎம்-கிஸான் திட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது:

பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் வகையில் அவா்களது வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதன் மூலம் 14 கோடி விவசாயிகள் பயனடைகின்றன. இந்தத்தொகையை அதிகரிப்பது அல்லது தொகையை முன்கூட்டியே செலுத்துவது என எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இப்போது இல்லை.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.38,282 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இத்திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அண்மையில் தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் சில போலியான பயனாளிகள் சோ்க்கப்பட்டதாக தெரியவந்தது. சில மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முறைகேடாக பயனடைந்தவா்களிடம்இருந்து ரூ.47 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. தமிழக சிபிசிஐடி போலீஸாா் இது தொடா்பாக 10 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். தவறு செய்த ஒப்பந்த ஊழியா்கள் அடையாளம் காணப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். தொடா்புடைய அரசு அதிகாரிகள் மீது பணியிடைநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் விண்ணப்பிப்பவா்கள் உண்மையாக தகுதியுள்ள விவசாயிகள்தான் என்பதை உறுதி செய்யும் பணி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைச் சாா்ந்தது. மகாராஷ்டிர மாநிலத்திலும் இத்திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com