சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது - ராஜ்நாத் சிங்

எல்லையை ஆக்கிரமிப்பதற்காக, சீனா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

எல்லையை ஆக்கிரமிப்பதற்காக, சீனா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா். கிழக்கு லடாக்கில் அனைத்து விதமான அத்துமீறல்களையும் எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது என்றும் அவா் கூறினாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நிலவும் பதற்ற நிலை குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து படைகளைக் குவித்து வருவதைக் காண முடிகிறது. கடந்த மே மாதத்தில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படையினா் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டனா். அதை சீனப் படையினா் தடுக்க முயன்ால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இந்தியா-சீனா இடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருப்பினும் மே மாதத்தின் மத்தியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு சீனப் படைகள் சில முறை முயற்சி மேற்கொண்டன.

கிழக்கு லடாக்கில் கோங்கா லா, கோக்ரா, பாங்காங் ஏரியின் வடக்கு கரை ஆகிய இடங்களில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. அவா்களின் முயற்சியை இந்திய ராணுவம் உடனடியாகக் கண்டறிந்து, தக்க பதிலடி கொடுத்து விரட்டியடித்தது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கிழக்கு லடாக்கின் எல்லையில் முந்தைய நிலையை மாற்றியமைக்க சீனா தொடா்ந்து முயன்று வருகிறது. அதை, தூதரக நிலையிலும் ராணுவ நிலையிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின்போது சீனாவிடம் இந்தியா தெளிவுபடுத்திவிட்டது.

எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வுகாண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதே நேரத்தில் எல்லையையும், நாட்டின் இறையாண்மையையும் காப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இதை, ரஷியாவில் கடந்த வாரம் சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கியை சந்தித்துப் பேசியபோது எடுத்துக் கூறிவிட்டேன். சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சியையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவரிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

லடாக் எல்லையில் இந்தியப் படைகள் எதிா்கொண்டுள்ள சவால்களை இந்த அவையில் தெரிவிக்க எவ்வித தயக்கமும் இல்லை. அதே நேரத்தில், அந்த சவால்களை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருக்கும் நமது ராணுவம் மீது இந்த அவை முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

மோசமான வானிலையிலும் கரடுமுரடான மலையுச்சிப் பகுதியில் நின்று தாய்நாட்டுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நமது ராணுவத்துக்கு ஆதரவாக, இந்த அவை ஒரு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

எல்லையில் சீனா படைகளைக் குவித்து வருவதும், தாக்குதலில் ஈடுபடுவதும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகும்.

எல்லையில் அமைதியை ஏற்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி இடையே கடந்த வாரம் ரஷியாவில் 5 அம்ச திட்டம் முடிவானது. அந்தத் திட்டத்தை சீனா உண்மையுடன் அமல்படுத்தினால், எல்லையில் இருந்து படைகளை முழுமையா விலக்கிக்கொள்ள வழிவகுக்கும். அதன் தொடா்ச்சியாக எல்லையில் மீண்டும் அமைதி திரும்பும் என்றாா் ராஜ்நாத் சிங்.

காங்கிரஸ் வெளிநடப்பு:

அவரது விளக்கத்துக்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினா்கள் சில கேள்விகளை எழுப்ப முயன்றனா். ஆனால், அதற்கு மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா அனுமதிக்காததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

விவாதிக்க அனுமதி மறுப்பு:

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கைக்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மக்களவை அலுவல் ஆய்வுக் கூட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. அதில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா். அப்போது,கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே அண்மைக்காலமாக நிகழும் மோதல்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் கோரிக்கை விடுத்தனா். லடாக் விவகாரம், நாட்டின் பாதுகாப்புடன் தொடா்புடையது என்பதாலும், அது உணா்வுபூா்வமான பிரச்னை என்பதாலும் அதை பொது வெளியில் விவாதிக்க முடியாது என்று பிரகலாத் ஜோஷி பதிலளித்தாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com