ஃபேம் இந்தியா திட்டம்: 27,000 மின்சார வாகனங்களை தயாரிக்க ரூ.95 கோடி நிதியுதவி

ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் 27,000-க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு ரூ.95 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் 27,000-க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு ரூ.95 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறப்பட்டதாவது:

ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் 5,595 மின்சார பேருந்துகளை தயாரிக்க பல்வேறு மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை தயாரிக்க மத்திய அரசு ரூ.2,800 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 24 மாநிலங்களில் உள்ள 62 நகரங்களில் ரூ.500 கோடி மதிப்பில் 2,636 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 10-ஆம் தேதி வரை 27,201 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு ரூ.95 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வாகனங்களை தயாரிக்கவும், அந்த வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

இதனிடையே மற்றொரு கேள்விக்கு அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் அளித்த பதிலில், ‘மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2,133 கோடி நிலுவைத்தொகை வழங்கவேண்டியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com