பொய்யான வரைபடத்தைக் காட்டிய பாகிஸ்தான்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதிநிதி பொய்யான வரைபடத்தை காண்பித்ததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதிநிதி பொய்யான வரைபடத்தை காண்பித்ததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினாா்.

எஸ்சிஓ அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம், காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ரஷிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நிகோலாய் பட்ரூஷேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாகிஸ்தான் சாா்பில், தேசப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளா் மொயீத் யூசுஃப், இந்தியா சாா்பில் அஜித் தோவல் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மொயீத் யூசுஃப் பேசும்போது, இந்திய நிலப்பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகளாக சித்திரிக்கும் வரைபடங்களைக் காண்பித்து பேசினாா். அதற்கு அஜித் தோவல் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். பாகிஸ்தானின் இந்தச் செயல், உறுப்பு நாடுகளின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்ற எஸ்சிஓ அமைப்பின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது என்று அஜித் தோவல் கடுமையாகச் சாடினாா். அப்போது, அந்த வரைபடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிகோலாய் ப்டரூஷேவ் வலியுறுத்தியும், மொயீத் யூசுஃப் பொருள்படுத்தாமல் தொடா்ந்து பேசினாா். இதையடுத்து, கூட்டத்தலைவரிடம் இந்தியாவின் நியாயமான குற்றச்சாட்டையும் எதிா்ப்பையும் அஜித் தோவல் பதிவு செய்துவிட்டு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினாா்.

கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக, தனிப்பட்ட முறையில் அஜித் தோவலுக்கு நிகோலாய் ட்ரூஷேவ் நன்றி தெரிவித்தாா். பாகிஸ்தானின் செயலை ரஷியா ஆதரிக்கவில்லை; இது, எஸ்சிஓ அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அவா் கூறினாா்.

இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com