எம்.பி.க்களுக்கான ஊதியக் குறைப்பு மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஊதியத்தை 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
நாடாளுமன்றம்.
நாடாளுமன்றம்.

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஊதியத்தை 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தொழிலக உற்பத்தி, மக்களின் தேவை ஆகியவை குறைந்ததால் நாட்டின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் காரணமாக மத்திய அரசுக்கான வருவாயும் குறைந்தது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தைக் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதற்காக அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியையும் 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் நிறுத்திவைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில், ஊதியக் குறைப்பு அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் நோக்கில் ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படிகள், ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதா- 2020’, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அதற்கு எம்.பி.க்களின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது.

எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தற்காலிகமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், அதைச் சமாளிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது’ என்றாா்.

அதையடுத்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக பெருவாரியான எம்.பி.க்கள் வாக்களித்தனா்.

முன்னதாக, விவாதத்தின்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, ‘தொகுதி மேம்பாட்டு நிதியானது தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் நலனுக்காக எம்.பி.க்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பக்கம் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மறுபக்கம் எம்.பி.க்களுக்கான ஊதியத்தையும், நிதியையும் குறைத்து வருகிறது. இது அறிவீனமாக உள்ளது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com