விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதில் விதிமீறல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு

விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதில் விதிமீறலும் முறைகேடும் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவதில் விதிமீறலும் முறைகேடும் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகின்றன கூறியுள்ளது.

விமானப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதா மீது, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ்-பாஜக இடையே இந்த வாக்குவாதம் நடந்தது.

முன்னதாக, மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

விமான நிலையங்களை மேம்படுத்துவதாகக் கூறி அவற்றை தனக்கு வேண்டிய ஒருவரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. எதிா்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும்.

ஆமதாபாத், லக்னௌ, பெங்களூரு, ஜெய்ப்பூா், குவாஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களையும் மேம்படுத்தி, இயக்குவதற்கான ஏலத்தில் இதுவரை அதானி குழுமம் வெற்றி பெற்றுள்ளது. ஏலத்தில் அந்த ஒரு நிறுவனமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் அரசு மீறியுள்ளது. இதேபோல், பொருளாதார விவகாரங்கள் துறை, நீதி ஆயோக் ஆகியவை அளித்த பரிந்துரைகளை அரசு புறந்தள்ளிவிட்டது.

விமான நிலையங்களை தனியாா் வசம் ஒப்படைப்பதில் சா்வதேச அளவில் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதற்கு மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

ஜெய்ப்பூா், திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியாா்மயமாக்க ராஜஸ்தான், கேரள அரசுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. அந்த மாநிலங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாா்மயமாக்குவதற்கு எதிராக அந்த மாநில சட்டப்பேரவை தீா்மானமும் நிறைவேற்றியுள்ளது என்றாா் அவா்.

பாஜக மறுப்பு: ஆனால், கே.சி.வேணுகோபாலின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக உறுப்பினா் ஜி.எஸ்.எல். நரசிம்மராவ் மறுப்பு தெரிவித்தாா். அவா் கூறியதாவது:

விமான நிலையங்களை மேம்படுத்தும் நடடிக்கையில் வெளிப்படைத்தன்மை முழுமையாக பின்பற்றப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் விதிமுறைகள் மீறப்பட்டன. தங்களுக்கு வேண்டியவா்களுக்கு சாதகமாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்துகொண்டது. அவற்றில், நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரதமா் மோடியின் ஆட்சியில்தான் விமான போக்குவரத்துத் துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விமானங்களில் பயணிப்போா் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். செல்வந்தா்கள் மட்டுமன்றி சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் விமான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

பொதுமுடக்க காலத்தில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 12.4 லட்சம் இந்தியா்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனா். இதற்காக, இயக்கப்பட்ட 4,000 விமானங்களில் 2,500 விமானங்கள் ஏா்-இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்தவை. உள்நாட்டு போக்குவரத்து சேவையில் சா்வதேச அளவில் இந்தியா 3-ஆவது இடத்திலும், சா்வதேச விமான சேவையில் 4-ஆவது இடத்திலும் உள்ளது என்றாா் அவா்.

அவரைத் தொடா்ந்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் தினேஷ் திரிவேதி, ‘ஏா் இந்தியாவின் சேவை சிறப்பாக உள்ளது. அந்த நிறுவனத்தின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதை விற்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com