கிழக்கு லடாக்கில் போரை எதிர்கொள்ள படைகள் தயார்

கிழக்கு லடாக்கில் சீனா போர்ச் சூழலை உருவாக்கினால், அதை எதிர்கொண்டு பதிலடி தாக்குதல் கொடுக்கும் வகையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லே எல்லைப் பகுதியில் புதன்கிழமை நிலைநிறுத்தப்பட்ட  இந்திய விமானப்படை போர் விமானம்.
லே எல்லைப் பகுதியில் புதன்கிழமை நிலைநிறுத்தப்பட்ட  இந்திய விமானப்படை போர் விமானம்.

புது தில்லி: கிழக்கு லடாக்கில் சீனா போர்ச் சூழலை உருவாக்கினால், அதை எதிர்கொண்டு பதிலடி தாக்குதல் கொடுக்கும் வகையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில், "இந்திய ராணுவத்திடம் போதிய அளவில் வீரர்கள் இல்லை; எல்லையில் குளிர்காலம் முழுவதும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது' என்று செய்தி வெளியாகியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டல செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறியதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பல மாதங்களாக நீடிக்கும் மோதல் போக்கை எதிர்கொள்வதற்குத் ராணுவ ரீதியில் முழுமையான தயார் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது.
லடாக் பிராந்தியத்தில் வரும் நவம்பரில் 40 அடி உயரம் வரை பனிக்கட்டிகள் இருக்கும். குளிர் மைனஸ் 30 டிகிரியில் இருந்து 40 சதவீதம் வரை இருக்கும். இந்தக் குளிரால், லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் பனிக்காலத்திலும் போரிடும் அனுபவம் இந்திய வீரர்களுக்கு அதிகமுண்டு. உத்தரவிட்டால், உடனடியாக களத்தில் இறங்கி போரிடும் அளவுக்கு உளவியல் ரீதியாக அவர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உண்மைகளை உலக நாடுகள் அறியும். ஆனால், இந்திய ராணுவத்தின் வலிமை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைந்து செல்லும் திறன், நவீன ஆயுத தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து குறைவாகவே உலக நாடுகளுக்குத் தெரியும்.
உலகின் மிக உயர்ந்த படைத்தளமான சியாச்சின் பனிச்சிகரத்தில் இந்திய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அங்கு, சீனா எதிர்பார்க்கும் அளவைக் காட்டிலும் குளிர் அதிகமாக இருக்கும். 
இதுதவிர, சீன எல்லைப்பகுதி அருகில் பல விமானப் படைத் தளங்கள் உள்ளன. சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றுவதற்கு நவீன இந்தியரங்கள் தயார் நிலையில் உள்ளன. ராணுவத்துக்குத் தேவையான எரிபொருள்கள் போதுமான அளவில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
போரிடாமல் அச்சுறுத்தியே வெற்றிபெற வேண்டும் என்பதே எப்போதும் சீனாவின் நோக்கமாகும். ஒருவேளை அவர்கள் போர்ச்சூழலை உருவாக்கினால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க பயிற்சி பெற்ற, உளவியல் ரீதியாக தயார்படுத்தப்பட்ட இந்திய ராணுவம் உள்ளது. சீனப் படைகளின் எண்ணங்கள், அந்நாட்டு ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளன என்று அந்த செய்தித்தொடர்பாளர் கூறினார்.
மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய சீனா: கிழக்கு லடாக்கில், பாங்காக் ஏரியின் வடக்கு கரை அருகே சீன ராணுவம் கடந்த வாரம், இந்தியப் படையினரை அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோவில் இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இதுகுறித்து தகவலறிந்த வட்
டாரங்கள் மேலும் கூறியதாவது:
பாங்காக் ஏரியின் வடக்கு கரை அருகில் உள்ள இந்திய நிலைகளை நோக்கி சீனப் படையினர் நெருங்கி வந்தனர். அவர்களை இந்தியப் படையினர் உறுதியுடன் எதிர்த்து நின்றதால், அவர்கள் திரும்பிச் சென்றனர். அப்போது, இந்தியப் படையினரை அச்சுறுத்தும் நோக்கில் சுமார் 100 முதல் 200 சுற்றுகள் வரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன், கடந்த 7-ஆம் தேதி இரவு, பாங்காக் ஏரியின் தெற்குக் கரையில் இந்தியப் படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவத்தினர் வானத்தை நோக்கி பல முறை சுட்டனர். அந்த சம்பவத்தின்போதும், இந்தியப் படைகளின் சாமர்த்தியத்தால், இந்திய நிலைகளை நெருங்கும் சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com