தில்லி கலவரம்: 10,000 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரம் தொடர்பாக 10,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வடகிழக்கு தில்லி வகுப்புவாத கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிகையை இரும்புப் பெட்டிகளில் வைத்து கர்கர்டுமா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் தில்லி சிறப்பு பிரிவு போலீஸார்.
வடகிழக்கு தில்லி வகுப்புவாத கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிகையை இரும்புப் பெட்டிகளில் வைத்து கர்கர்டுமா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் தில்லி சிறப்பு பிரிவு போலீஸார்.

புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரம் தொடர்பாக 10,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 15 பேர் மீது கடுமையான சட்டமான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) உள்பட பல்வேறு பரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தாஹிர் ஹூசைன், பர்வேஷ் அகமது, முகமது இலியாஸ், சாயிப் காலித், இஸ்ராத் ஜஹான், மீரான் ஹைதர், சஃபூர் ஜர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா, ஷாதாப் அகமது, நதாஷா நார்வல், தேவாங்கானா காலிடா, தஸ்லீம் அகமது, சலீம் மாலிக், சலீம் கான், அதர் கான் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களின் வாட்ஸ் ஆப் - சாட்கள், சிடிகளில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போடப்பட்டுள்ளன என கர்கர்டுமா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத்திடம் தில்லி போலீஸ் சிறப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு கலவரத்தில் களத்தில் உள்ளவர்களை வாட்ஸ்-ஆப் மூலம் சதிகாரர்கள் இயக்கி உள்ளனர். மொத்தம் 25 இடங்களில் 25 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. சீலம்பூர் - ஜாஃப்ராபாத் பகுதி கலவரத்தை வாட்ஸ்-ஆப் குழுக்கள் மூலம் சதிகாரர்கள் இயக்கி உள்ளனர்.
அவர்களுக்கு குடியுரிமை சட்டத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை வழங்கி சதிகாரர்கள் கலவரக்காரர்களை வழிநடத்தி உள்ளனர். தில்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது பெரிய கலவரத்தைத் தூண்ட தாஹிர் ஹூசைன், காலித் சாய்பி, உமர் காலித் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக  தாஹிர் ஜனவரி 8-ஆம் தேதி உமர் காலித், சாய்பி ஆகியோர் சாஹின்பாக் தொடர் போராட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார். மொத்தம் 747 சாட்சியங்கள் உள்ளன. அதில் 51 பேர் சாட்சியங்கள் நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லி கலவர சம்பவங்களின் சதிச் செயல்களைத் தொகுத்து குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என்றும் இது விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் தில்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவானவர்களுக்கும் இடையே பிப்ரவரி 24-ஆம் தேதி ஏற்பட்ட மோதல் வகுப்புவாத கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com