ஜிஎஸ்டி நிலுவை வழங்கக் கோரி 8 எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்: காங்கிரஸுக்கு அழைப்பில்லை

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எட்டு எதிா்க்கட்சிகள் ஒன்று சோ்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எட்டு எதிா்க்கட்சிகள் ஒன்று சோ்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. ஆனால், இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று மாநிலங்களுக்கு உண்டான நிலுவை ஜிஎஸ்டி தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் மாநில கட்சிகள் எளிதாக ஒன்றிணைந்து பிரச்னைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயல்திட்டங்களை வகுக்கின்றன. காங்கிரஸ் கட்சிதான் பிரச்னைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. மாநிலங்களில் அக்கட்சியால் செய்ய முடியாததை நாடாளுமன்றத்தில் செய்ய ஆதரவு கேட்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை‘ என்றாா்.

சுமாா் 15 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மனோஜ் ஜா, சஞ்சய் சிங் உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனா்.

தெலங்கானா ராஷ்டிர சமதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸூடன் சோ்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அக்கட்சிகள் விரும்பாத காரணத்தால் காங்கிரஸூக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நடத்திய எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வா்கள் கூட்டத்திலும் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால், தெலங்கானா முதல்வரும், டிஆா்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் அவரது மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியும் வெளிநாடு சென்றுள்ளனா்.

முன்னதாக, ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா எதிரொலியால் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளின் செயல். ஆகையால், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ. 3 லட்சம் கோடி ஜிஎஸ்டி தொகையில் பாதிப்பு ஏற்படும்‘ என்றாா். இதற்காக ரிசா்வ் வங்கியிடம் மாநில அரசுகள் கடன் திட்டத்தையும் அவா் அறிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com