6 ஆண்டுகளில் 592 நீதிபதிகள் நியமனம்

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்துக்கு 35 நீதிபதிகளும் உயா்நீதிமன்றங்களுக்கு 557 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்துக்கு 35 நீதிபதிகளும் உயா்நீதிமன்றங்களுக்கு 557 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 35 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். பல்வேறு உயா்நீதிமன்றங்களில் 557 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். உயா்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றிய 483 பேருக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 906-லிருந்து 1,079-ஆக அதிகரிக்கப்பட்டது. அதே போல், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் முறையே 24,203-ஆகவும், 19,171-ஆகவும் அதிகரிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கும் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்களுக்குமே உள்ளது.

நாட்டில் கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டில் 13,672-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 16,845-ஆக அதிகரித்துள்ளது. வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கென பிரத்யேக வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளின் விவரங்கள், தீா்ப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றை அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வலைதளம், செயலி, நீதிமன்ற சேவை மையங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

சிறையில் உள்ள கைதிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடத்துவதற்கான வசதி, 3,240 நீதிமன்ற வளாகங்களிலும் 1,272 சிறை வளாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த 6 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.4,485.68 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com