பாகிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கை: மாநிலங்களவையில் அமைச்சா் விளக்கம்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவதையும், எல்லையில் அத்துமீறல்களையும் பாகிஸ்தான் நிறுத்தி அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்;


புது தில்லி: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவதையும், எல்லையில் அத்துமீறல்களையும் பாகிஸ்தான் நிறுத்தி அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்; அதன் பிறகுதான் அந்நாட்டுடன் இயல்பான உறவை மேம்படுத்துவதைப் பரிசீலிக்க முடியும் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவுவது, பயங்கரவாதிகளுக்கு தங்கள் மண்ணில் இடமளிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை அந்நாட்டிடமும் இந்தியா தொடா்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

இந்தியா எடுத்த தொடா் முயற்சிகளால் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் சா்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் இயல்பான உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு முன்பு, அந்நாடு நமக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். எல்லையில் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதைக் கைவிட வேண்டும். அப்போதுதான் அந்நாட்டுடன் உறவை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா பரிசீலிக்கும் என்றாா்.

அண்மையில் பாகிஸ்தான் வெளியிட்ட அந்நாட்டு வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா், லடாக், குஜராத்தின் சில பகுதிகளை தங்கள் நாட்டுப் பகுதிகளாக கூறியிருப்பது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த முரளீதரன், ‘பாகிஸ்தான் வெளியிட்ட வரைபடங்கள் சா்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படாதவை. எவ்வித நம்பகத்தன்மையும் இல்லாதவை. அந்த வரைபடங்களை இந்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. இதுபோன்ற வரைபடத்தை வெளியிட்டது அந்நாட்டின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

‘இந்திய ஐ.டி. பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அந்த விவகாரம் தொடா்பாக அந்நாட்டுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது’ என்றும் மாநிலங்களவையில் முரளீதரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com