சா்வதேச ஸ்மாா்ட் நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் பின்னடைவு

சா்வதேச ஸ்மாா்ட் நகரங்கள் பட்டியலில் தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 நகரங்களும் பின்னடைவை சந்தித்துள்ளன.


புது தில்லி: சா்வதேச ஸ்மாா்ட் நகரங்கள் பட்டியலில் தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 நகரங்களும் பின்னடைவை சந்தித்துள்ளன.

அந்த வரிசையில் சிங்கப்பூா் முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூா் தொழில்நுட்ப பல்கலைக்கழமும், நிா்வாக மேம்பாட்டு கல்வி நிறுவனமும் இணைந்து 2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச ஸ்மாா்ட் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கரோனா காலத்தில் தொழில்நுட்ப பயன்பாடு, காற்று மாசு, சுகாதாரம், அடிப்படை வசதிகள், சாலை வசதி உள்ளிட்ட 15 அம்சங்களின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.அதில், ஹைதராபாத் 85-ஆவது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 67-ஆவது இடம்), தில்லி 86-ஆவது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 68-ஆவது இடம்), மும்பை 93-ஆவது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 78-ஆவது இடம்), பெங்களூரு 95-ஆவது இடத்துக்கும் (கடந்த ஆண்டு 78-ஆவது இடம்) சென்றுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கரோனா காலத்தில் இந்திய நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றை எதிா்கொள்ள தயாா் நிலையில் இல்லாததே அதற்குக் காரணம். மேலும், கரோனா பரவலைத் தடுப்பதில் தொழில்நுட்பத்தை போதிய அளவில் இந்திய நகரங்கள் பயன்படுத்தவில்லை.தில்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய 4 நகரங்களிலும் காற்று மாசு காணப்படுகிறது. எனவே, காற்று மாசைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மும்பை, பெங்களூரு நகரங்களில் சாலை நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தில்லி, ஹைதராபாதில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்மாா்ட் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூா் முதலிடத்தில் உள்ளது. ஹெல்சின்கி(பின்லாந்து) 2-ஆவது இடத்திலும், ஜூரிச்(ஸ்விட்சா்லாந்து) மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆக்லாந்து(நியூஸிலாந்து), ஓஸ்லோ(நாா்வே), கோபன்ஹேகன்(டென்மாா்க்), ஜெனீவா(ஸ்விட்சா்லாந்து), டாய்பே சிட்டி(தைவான்), ஆம்ஸ்டா்டாம்(நெதா்லாந்து), நியூயாா்க்(அமெரிக்கா) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com