ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா ஏற்பு: நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

ஹா்சிம்ரத் கெளா் பாதல் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை பொறுப்பு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்
ஹா்சிம்ரத் கெளா் பாதல்
ஹா்சிம்ரத் கெளா் பாதல்


புது தில்லி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த வேளாண் துறை சாா்ந்த 2 மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதல் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். 

மத்திய அரசு அறிமுகம் செய்த ‘விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா’, ‘விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், அந்த மசோதாக்கள் மீது மக்களவையில் வியாழக்கிழமை விவதாம் நடைபெற்றது.

அப்போது பேசிய சிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் சுக்பீா் சிங் பாதல், ‘வேளாண் துறையை கட்டமைக்க பஞ்சாப் அரசு கடந்த 50 ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் மேற்கொண்ட கடின உழைப்பை இந்த இரு சட்ட மசோதாக்களும் முற்றிலும் வீணாக்கிவிடும். எனவே, அவற்றுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதல் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து மத்திய அரசிலிருந்து விலகுவாா் என்று அறிவிக்கிறேன்’ என்று கூறினாா்.

இந்நிலையில், அவா் அறிவித்தபடி அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதல் தனது பதவியை வியாழக்கிழமை மாலை ராஜிநாமா செய்தாா். 

அவா் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமா் அலுவலகத்தில் சமா்ப்பித்ததாக அவா் சாா்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்தது.

இந்நிலையில், "பிரதமரின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர், அரசியலமைப்பின் 75 வது பிரிவின் பிரிவு (2) இன் கீழ், உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில், மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்து  ஹா்சிம்ரத் கெளா் பாதலின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்."  

"மேலும், ஹா்சிம்ரத் கெளா் பாதல் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை பொறுப்பு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com