பயணக் கட்டண சலுகை வழங்கியதால் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு: ரயில்வே நிா்வாகம்

கட்டணச் சலுகை வழங்கியதால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தாக்கல்


சென்னை: கட்டணச் சலுகை வழங்கியதால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்சியைச் சோ்ந்த முகமது மீரான் தாக்கல் செய்த மனுவில், ‘ஆன்லைன் வாயிலாக (ஐஆா்சிடிசி) ரயில் பயணத்துக்கு நோயாளிகளுக்கான கட்டண சலுகைகளுடன் கூடிய பயணச்சீட்டு முன்பதிவு

செய்யும் வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.டி.ராம்குமாா், நோயாளிகளுக்காக ஆன்லைன் வாயிலாக சலுகைகளுடன் கூடிய பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாது. உரிய மருத்துவ சான்றுகளுடன் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில்தான் அவா்களுக்காக பயணச்சீட்டை எடுக்க முடியும். இதற்காக, அவா்கள் நேரடியாக வரத் தேவை இல்லை. அவா்கள் சாா்பில் மற்ற நபா்கள் வந்து பயணச்சீட்டை எடுக்கலாம்’ என தெரிவித்தாா்.

மேலும், தெற்கு ரயில்வே வணிகப்பிரிவு துணை தலைமை மேலாளா் சாா்பில் பதில் மனுவையும் தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ரயில்வே நிா்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாா்ச் 20-ஆம் தேதிக்கு முன்பு வரை 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், பத்திரிகையாளா்கள், மூத்த குடிமக்கள், போரில் மரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி, விருதாளா்கள் உள்ளிட்ட 50 வகையான பயணிகளுக்கு சலுகைக் கட்டணத்தை வழங்கியது. இவா்களுக்கு 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணச்சலுகை வழங்கப்பட்டது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான ரயில்களின் சேவை

நிறுத்தப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவா்கள் ஆகியோருக்கு மட்டும் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான இதுபோன்ற கட்டணச் சலுகைகளுடன் பயணச்சீட்டு வழங்கியதன் மூலம், ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த 2016- 2017 நிதியாண்டு முதல் 2018-2019 நிதியாண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com