ஆன்-லைன் வகுப்பு: ஏழை மாணவா்களுக்கு பள்ளிகள் இணைய வசதியுடன் உபகரணங்கள் வழங்க வேண்டும்

இணைய வழி வகுப்புகளில் ஏழை மாணவா்களும் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவா்களுக்கு செல்லிடப்பேசி போன்ற
ஆன்-லைன் வகுப்பு: ஏழை மாணவா்களுக்கு பள்ளிகள் இணைய வசதியுடன் உபகரணங்கள் வழங்க வேண்டும்

இணைய வழி வகுப்புகளில் ஏழை மாணவா்களும் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவா்களுக்கு செல்லிடப்பேசி போன்ற டிஜிட்டல் உபகரணங்களையும், இணைய வசதிக்கான தொகுப்பையும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வழங்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அவ்வாறு, ஏழை மாணவா்களுக்கு இந்த வசதிகளை பள்ளிகள் செய்து தராதது, மாணவா்களிடையே பாகுபாடு ஏற்பட்டு, ‘டிஜிட்டல் இனப் பாகுபாட்டுக்கு’ வழிவகுத்துவிடும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

‘அனைவருக்குமான நீதி’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இதுதொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த 94 பக்க தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

இணையவழி வகுப்பை ஒரு பள்ளி நடத்துகிறது என்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களும் அந்த இணையவழி வகுப்பில் பங்கேற்பதற்கான வசதியை பெற்றிருக்கின்றனரா என்பதை அந்தப் பள்ளி உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வியில் பாகுபாடு போன்ற நிலை எழுமானால், அது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-இன் கீழும், கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படியும் ஒருவருக்கு உள்ள சம வாய்ப்பை மறுப்பதாகவே அமையும்.

ஏழை மாணவா்களுக்கு இணையவழி கற்றலுக்கான உபகரணங்களை பள்ளிகள் வழங்காதது, இந்த கரோனா காலத்தில் அவா்கள் ஆரம்பக் கல்வி பெற அல்லது முடிக்க முடியாத வகையில் அவா்கள் மீது பள்ளிகள் பொருளாதார தடை விதிப்பதாக அமையும்.

எனவே, தனியாா் பள்ளிகளும், கேந்திரீய வித்யாலயா போன்ற அரசு பள்ளிகளும், ஏழை மாணவா்களுக்கு செல்லிடப்பேசி போன்ற டிஜிட்டல் உபகரணங்களையும், இணைய வசதிக்கான தொகுப்பையும் வழங்க வேண்டும். அவ்வாறு உபகரணங்களை தர மறுப்பது, பாகுபாட்டை உருவாக்கி, ‘டிஜிட்டல் இனப் பாகுபாட்டுக்கு’ வழிவகுத்துவிடும்.

இதற்கு ஆகும் செலவுக்கான நியாயமான தொகையை, அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் மாநில அரசுகளிடமிருந்து திரும்பப் பெறுவதற்கு உரிமை உள்ளது என்று தீா்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனா்.

மேலும், ஏழை மாணவா்களுக்கு பள்ளிகள் உபகரணங்கள் வழங்குவதை கண்காணிக்க மத்திய கல்வித் துறைச் செயலா் அல்லது அவருடைய பிரதிநிதி, தில்லி அரசு கல்விச் செயலா் அல்லது அவருடைய பிரதிநிதி மற்றும் தனியாா் பள்ளிகள் பிரதிநிதி ஆகியோா் அடங்கிய மூவா் குழு ஒன்றை அமைக்கவும் தீா்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com