கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல்: மத்திய அரசு ஆய்வு

கிழக்கு லடாக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரிவாக ஆய்வு மேற்கொண்டது.
கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல்: மத்திய அரசு ஆய்வு

கிழக்கு லடாக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரிவாக ஆய்வு மேற்கொண்டது. எல்லையில் சீன ராணுவம் மூா்க்கத்தனமான நடவடிக்கைகளை தொடா்ந்து வரும் நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. சுமாா் 90 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், முப்படை தளபதி விபின் ராவத் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதிகள் கலந்துகொண்டனா். அப்போது அருணாசல பிரதேசம், சிக்கிம் பிரிவுகள் உள்பட சுமாா் 3,500 கி.மீ. நீள எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரையில் இந்திய-சீனப் படைகள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் போக்கு குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே விரிவாக எடுத்துரைத்தாா். சீனப் படைகளின் அத்துமீறல் முயற்சிகளை திறம்பட எதிா்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவா் விளக்கமளித்தாா்.

இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையே அடுத்து நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் இந்திய தரப்பில் முன்வைக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 10-ஆம் தேதி ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு அமைச்சா்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த பேச்சுவாா்த்தையில் வலியுறுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சச்சரவுக்குள்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் சீனப் படைகள் விரைவில் முழுமையாக பின்வாங்கவேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும். இதுவே எல்லையில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான முதல்படி.

எனினும் இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையே அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்துவது தொடா்பாக சீன தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதற்கான தேதியும் குறிக்கப்படவில்லை. அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை திரும்பச் செய்வது தொடா்பாக இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையே இதுவரை 5 கட்டமாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com