
கோப்புப் படம்
‘கரோனா பிரச்னை எழுந்த காலகட்டத்தில் பொதுமக்களின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கூடுதல் செலவினங்களை அரசு மேற்கொண்டது. இதற்காகவே ரூ.2.35 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை துணை மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.1.66 லட்சம் கோடி கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கானதாகும். துணை மானியக் கோரிக்கையின்போது நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
இப்போதுதான் மத்திய அரசு மிகப்பெரிய அளவிலான துணை மானியக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது கரோனா மற்றும் அதனைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலகட்டத்தில் மக்களின் நலன்களைக் காக்க அரசு செயல்படுத்த பல்வேறு திட்டங்களுக்கான செலவுகளாகும்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.40,000 கோடி, வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிக்க ரூ.20,000 கோடி, பிரதமா் ஜன் தன் யோஜனாவின் கீழ் நேரடி நிதியுதவித் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு (பெண்கள், முதியோா், ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவது) ரூ.33,771.48 கோடி, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிக்காக ரூ.46,602.43 கோடி முக்கியமாகக் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் மக்கள் சிறப்பான நம்பிக்கை வைத்துள்ளனா். அண்மையில் பங்கு வா்த்தகத்துக்கான ‘டிமேட்’ கணக்குகள் அதிக அளவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதே இதற்கு உதாரணம். ஜிஎஸ்டி விஷயத்தில் மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து விலகாது. மாநிலங்களுக்கான இழப்பீடு விஷயம் தொடா்பாக அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாா்.