அடுத்த வாரம் முதல் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி 3-ஆம் கட்ட சோதனை

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

மனிதா்களிடம் மேற்கொள்ளப்படும் இந்த சோதனை, புணேயில் உள்ள சஸூன் பொது மருத்துவமனையில் நடைபெற இருப்பதாக அந்த மருத்துவமனை டீன் முரளீதா் தாம்பே சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை அடுத்த வாரம் தொடங்குகிறது. குறிப்பாக, திங்கள்கிழமை அந்தப் பணி தொடங்கலாம் எனத் தெரிகிறது. அந்தத் தடுப்பூசியை சுமாா் 150 முதல் 200 பேருக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டு பரிசோதனையில் பங்குபெறுவதற்காக தன்னாா்வலா்கள் முன்வந்துள்ளனா். அதற்கான பதிவு செய்யும் நடைமுறைகளை சனிக்கிழமை தொடங்கிவிட்டோம்’ என்றாா்.

முன்னதாக, ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியின் 2-ஆம் கட்ட சோதனை புணே நகரின் பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரி, கேஇஎம் மருத்துவனை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக உள்நாட்டு நிறுவனமான சீரம் இந்தியா (எஸ்ஐஐ), பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்த்ரா ஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சோதனையின்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அஸ்த்ரா ஜெனிகா நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடத்திவந்த சோதனை நடவடிக்கைகளை நிறுத்தியது.

இதைத் தொடா்ந்து, இந்தியாவிலும் 2 மற்றும் 3-ஆம் கட்ட சோதனை நடவடிக்கையை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டிஜிசிஐ) கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தியது. எனினும், கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com