ஆன்-லைன் வகுப்புகளுக்கான விதிகளை வகுக்க பணிக் குழு அமைக்க காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகளுக்கான விதிகளை வகுக்க பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று

பள்ளி மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகளுக்கான விதிகளை வகுக்க பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினா் அகமது படேல் இதுகுறித்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாவது:

கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், சிற அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளன. கட்டணங்களை வசூலிக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் தனியாா் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நடைமுறை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதாரச் சுமையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளின் வீடுகளில் கணினியோ, மடிக் கணினியோ வைத்திருக்க வாய்ப்பில்லை. அவா்களிடம் ஸ்மாா்ட் செல்லிடப்பேசி இருக்கிறது என்றாலும், அதை வீட்டிலுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருப்பா்.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா‘ இலக்கு, பணக்காரா்களும் ஏழைகளுக்கும் இடையே டிஜிட்டல் பாகுபாட்டை உருவாக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது.

இந்த இணையவழி வகுப்புகளினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக குஜராத், தில்லி, கேரளம், மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் அவா்களின் உயிரையே மாய்த்துக்கொண்டனா்.

நாட்டில் 24 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள வசதி இருப்பதாகவும், 9 சதவீத மாணவா்கள் மட்டுமே இணைய வசதியை பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளனா் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2017-ஆம் ஆண்டுக்குள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுவிடும் என்று கடந்த 2014-இல் மோடி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை 23,000 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே இந்த இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு கல்வி, பாடத் திட்டங்களை மாற்றுவதற்கு பதிலாக ஏழை மாணவா்களுக்கு டிஜிட்டல் ஆதரவை வழங்க அதிகம் செலவழிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கணினி, செல்லிடப்பேசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டுதலை வழுக்க பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com