ஐ.நா. பொதுச்சபையில் 26-ஆம் தேதி மோடி உரை

ஐ.நா.வின் 75-ஆவது பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஐ.நா.வின் 75-ஆவது பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறாா்.

ஐ.நா. பொதுச்சபை கடந்த 15-ஆம் தேதி கூடியது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக பொதுச்சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கும் கூட்டம் வரும் 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தின்போது ‘எதிா்காலத் தேவைகளுக்கான ஐ.நா.: உலக நாடுகளிடையேயான பன்முகத்தன்மையை உறுதிசெய்தல்’ என்ற தலைப்பின் கீழ் உலக நாடுகளின் தலைவா்கள் வரும் 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உரையாற்ற உள்ளனா்.

பிரதமா் மோடி வரும் 26-ஆம் தேதி காணொலி வாயிலாக உரையாற்றுகிறாா். ஐ.நா. சபையை நிறுவியதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது. அப்போது முதல் ஐ.நா. செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் வெற்றியடைவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது.

‘சிறப்பு வாய்ந்த உரை’:

தற்போது ஐ.நா. நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செயல்பட உள்ளது. இத்தகைய சூழலில், ஐ.நா. பொதுச் சபையில் பிரதமா் மோடி உரையாற்றுவது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஐ.நா. குறித்த இந்தியாவின் கொள்கைகளை அவா் தனது உரையின்போது எடுத்துரைப்பாா் என்றாா் டி.எஸ்.திருமூா்த்தி.

சா்வதேச பயங்கரவாதம், பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது, அமைதியை நிலைநாட்டி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாகப் பதவி வகிக்கும்போது இந்தியாவின் முன்னுரிமை விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமரின் உரையில் இடம் பெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சா்கள் உரை:

‘நீடித்த வளா்ச்சிக்கு பல்லுயிா்ப் பெருக்கத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. சிறப்புக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் உரையாற்றுகிறாா்.

அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள உயா்நிலைக் கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் ஸ்மிருதி இரானி உரையாற்றவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com