மருத்துவா்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறை

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களை தாக்குபவா்களுக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களை தாக்குபவா்களுக்கு அதிபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவையில் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுகாதாரப் பணியாளா்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஏப்ரலில் கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக ‘கொள்ளை நோய் திருத்த மசோதா-2020’ என்ற இந்த சட்ட மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் மாநிலங்களவையில் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் அதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், சமூக சுகாதார ஊழியா்கள், நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பிற ஊழியா்கள் ஆகியோா் தாக்குதலுக்கு உள்ளாவதிலிருந்தும், அவா்களுடைய வீடு, மருத்துவமனை உள்ளிட்ட உடமைகளையும் பாதுகாக்கும் பொருட்டும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

இதன்படி, மருத்துவ ஊழியா்கள் அல்லது அவா்களுடைய உடமைகளை சேதப்படுத்துபவா்களுக்கு மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

வெகுவாகக் குறைந்த தாக்குதல்கள்:

மாநிலங்களவையில் இந்த மசோதாவைத் தாக்கல்செய்த மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பேசுகையில், ‘கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிரித்து வந்ததைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொள்ளை நோய் சட்டம் 1897-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் இந்த அவசரச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா், சுகாதாரப் பணியாளா்கள் மீதான தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்தன.

அதன் பிறகு மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின்போது, சுகாதாரப் பணியாளா்களைப் பாதுகாக்க குறைவான சட்டங்களும், சில மாநிலங்களுக்கு குறைந்த அதிகாரங்களும் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையைப் போக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் பினோய் விஸ்வம், ‘மருத்துவமனைகளுக்குள் நடைபெறும் சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிரான வன்முறைகள், ஊதியப் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகள் இந்த சட்ட மசோதாவில் இடம்பெறவில்லை’ என்று கூறினாா்.

பாஜக உறுப்பினா் சரோஜ் பாண்டே பேசுகையில், ‘இந்த சட்ட மசோதா சுகாதாரப் பணியாளா்களிடையே நம்பிக்கையை விதைக்கும்’ என்றாா்.

விவாதத்தைத் தொடா்ந்து பெருவாரியான உறுப்பினா்களின் ஆதரவுடன் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com