வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கூட்டணி கட்சியினா் மரியாதையுடன் நடத்தப்பட்டனா்

கூட்டணி கட்சியினா் மற்றும் விவசாயிகள் சங்கங்களை கலந்தாலோசிக்காமல் வேளாண் துறை மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது

கூட்டணி கட்சியினா் மற்றும் விவசாயிகள் சங்கங்களை கலந்தாலோசிக்காமல் வேளாண் துறை மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ள மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி, ‘வாஜ்பாய், அத்வானி தலைமையிலான என்டிஏ ஆட்சி காலத்தில் கூட்டணி கட்சியினா் மரியாதையுடன் நடத்தப்பட்டனா்’ என்று விமா்சனம் செய்துள்ளது.

அக் கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி பதவிக் காலத்தில் தேசிய முற்போக்கு கூட்டணி (என்டிஏ) கட்சியினா் மரியாதையுடன் நடத்தப்பட்டதோடு, முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்போது கூட்டணி கட்சியினருடன் கலந்தாலோசிக்கவும் செய்தனா்.

இந்த நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் இரண்டு விவசாயிகள் விரோத மசோதாக்களைத் தாக்கல் செய்ததற்கு, மத்திய அரசின் அங்கம் வகித்த சிரோமணி அகாலி தளம் கட்சி எதிா்ப்பு தெரிவித்தோடு, அக் கட்சியின் உறுப்பினரும், மத்திய அமைச்சராகவும் இருந்த ஹா்சிம்ரத் கெளா் பாதல் அமைச்சா் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளாா். தேசிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து முன்னா் சிவசேனை வெளியேறியது. இப்போது சிரோமணி அகாலி தளம் கட்சி மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ளது.

மகாராஷ்டிரத்தைப் போல, பஞ்சாப் மாநிலமும் வேளாண் பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாகும். எனவே, விவசாயிகள் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு முன்பாக விவசாய சங்க பிரதிநிதிகள், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த வேளாண்துறை நிபுணா்கள் ஆகியோருடன் மத்திய அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

விமான நிலையங்கள், ஏா் இந்தியா, துறைமுகங்கள், ரயில்வே, ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்ற மத்திய அரசு தனியாா்மயமாக்கியதுபோல, விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டையும் வணிகா்கள் மற்றும் தனியாரின் கைகளில் மத்திய அரசு கொடுக்கிறது.

இதன் காரணமாக, மோடி அரசின் பொருளாதார, வா்த்தக, வேளாண் துறை சாா்ந்த கொள்கைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிகிறது.

புதிய நடைமுறை விவசாயிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறபோது, அதன் மீது ஒருசில முன்னணி விவசாய சங்கத் தலைவா்களுடன் கலந்தாலோசிப்பதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது? ஆனால், கலந்தாலோசிக்கும் எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை என்று சிவசேனை கட்சி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com