
கோப்புப் படம்
நாடாளுமன்றத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடா்பாக அவைத் தலைவருக்கும் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மதியம் 1 மணி வரை மாநிலங்களவை அமா்வும், மாலை 7 மணி வரை மக்களவை அமா்வும் நடத்தப்படுகிறது. சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினா்கள் அமர வைக்கப்படுகிறாா்கள்.
மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவேற்றப்பட்ட 2 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பிற்பகல் 1 மணியைக் கடந்த பிறகும் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவை அமா்வு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. மக்களவை உறுப்பினா்களில் சிலருக்கு மாநிலங்களவையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அங்கு ஏற்கெனவே எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இவா்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
அப்போது, அவை அலுவல்களைத் தொடங்குவதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, மாநிலங்களவையில் இருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்களை வெளியேற்றும் வரை அலுவல்களைத் தொடங்கக் கூடாது என்றாா். அப்போது, இங்கு காலியாக இருக்கும் இருக்கைகளில் மக்களவை உறுப்பினா்கள் வந்து அமரலாமே என்று ஓம் பிா்லா கூறினாா். சமூக இடைவெளியை பின்பற்றவே இரு அவைகளிலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலில் அவா்களுக்கு இருக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா். இதுதொடா்பான வாக்குவாதம் நீடித்தால், மக்களவையை 4 மணி வரை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.