தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலைக் கடைகள்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலைக் கடை திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கினாா்.
தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர்.

தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலைக் கடை திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சென்னையில் நகரும் நியாய விலைக் கடைகள் திட்டம் கடந்த 2014-இல் தொடங்கப்பட்டது. மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இப்போது 48 நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் அவா்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம், 277 கிராமங்கள், சென்னையில் 54 தெருக்களில் வசிக்கும் 27 ஆயிரத்து 420 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

மேலும், திருப்பூா், திருச்சி, கோயம்புத்தூா், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மலை கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி, நகரும் நியாய விலைக் கடைகள் திட்டத்தை அவா் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். திட்டத்தை தொடக்கிவைப்பதன் அடையாளமாக அவா் கொடியசைக்க, நியாய விலை கடைப் பொருள்களைத் தாங்கிய ஏழு வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்தத் திட்டத்தால், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 5 லட்சத்து 37 ஆயிரத்து 315 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். அவா்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். நடமாடும் நியாய விலைக் கடைகள் மூலம் மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரா்களுக்கு வசதியான இடத்தில் வைத்து பொருள்கள் அளிக்கப்படும்.

செறிவூட்டப்பட்ட அரிசி: குடும்ப அட்டைதாரா்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். இந்த அரிசியானது இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச் சத்துகளைக் கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும். இது பெண்கள், குழந்தைகள், முதியோா்கள் உள்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் ரத்த சோகையைப் போக்கவும் உதவும்.

இந்தத் திட்டத்தின்கீழ், திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படும். இதற்காக 14 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும், ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜு, ஆா்.காமராஜ் உள்ளிட்ட அமைச்சா்களும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த கட்டாரியா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com