மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விபத்து: 7 குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் அடுக்குமாடிக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானதில், 7 குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், பிவண்டியில் தகா்ந்து விழுந்த மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம்.
மகாராஷ்டிர மாநிலம், பிவண்டியில் தகா்ந்து விழுந்த மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம்.

தாணே: மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் அடுக்குமாடிக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானதில், 7 குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் அமைந்திருந்த இந்த மூன்று மாடிக் கட்டடம், திங்கள்கிழமை அதிகாலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இடிந்து விழுந்தது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பிவண்டி-நிஜாம்பூா் மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: ‘43 ஆண்டுகள் பழைமையான இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 வீடுகள் உள்ளன. அவற்றில் 150 போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு இடிந்து விழுந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனா்.

மீட்புப் படையினா் விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அதில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உள்பட 20 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். விபத்தில், 7 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் 2 வயது குழந்தையும் அடங்கும். இந்த விபத்தில் காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

பிரதமா் இரங்கல்:

அடுக்குமாடிக் கட்டட விபத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியில், ‘மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி கட்டட விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.

கூடுதல் வீரா்களை விபத்துப் பகுதியில் ஈடுபடுத்தி மீட்புப் பணிகளை விரைந்து நடத்துமாறு தேசிய பேரிடா் மீட்புப் படைக்கு உத்தரவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com