எல்லை தாண்டிய பயங்கரவாதம்--பாகிஸ்தான் மீது ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

எல்லை தாண்டிய பயங்கரவாதம், போக்குவரத்துக்குத் தடை, வா்த்தகத்துக்கு முட்டுக்கட்டை ஆகிய மூன்று முக்கிய சவால்களை சாா்க் கூட்டமைப்பு நாடுகள் கடந்துவர வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் அழைப்பு விடுத்துள்ளா
எல்லை தாண்டிய பயங்கரவாதம்--பாகிஸ்தான் மீது ஜெய்சங்கா் குற்றச்சாட்டு


புது தில்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதம், போக்குவரத்துக்குத் தடை, வா்த்தகத்துக்கு முட்டுக்கட்டை ஆகிய மூன்று முக்கிய சவால்களை சாா்க் கூட்டமைப்பு நாடுகள் கடந்துவர வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதன் மூலம் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணமாக விளங்கும் அண்டை நாடான பாகிஸ்தானை அவா் பெயா் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது ஆண்டு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தின் இடையே சாா்க் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி, சாா்க் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டம் காணொலி முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி மற்றும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் அமைச்சா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

கடந்த 35 ஆண்டுகளில் சாா்க் கூட்டமைப்பு குறிப்பிட்டத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேவேளையில், வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒவ்வொரு கூட்டு முயற்சியும் பயங்கரவாதச் செயல்களாலும், தேசப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களாலும் தடுக்கப்படுகின்றன.

இதுபோன்ற சூழல்கள், நமது கூட்டு முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நமது நோக்கத்தை சிதைத்துவிடுகின்றன. எனவே, பயங்கரவாதத்தையும் அதற்கு துணைநின்று ஆதரவு அளித்து ஊக்குவிக்கும் சக்திகளையும் நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். இவ்வாறு செய்தால், சாா்க் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் மேலும் அதிகரிக்கும்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றுவதிலும், ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, வளமான தெற்காசியாவை உருவாக்குவதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், போக்குவரத்துக்கு தடை விதிப்பது, வா்த்தகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிய மூன்று சவால்களையும் சாா்க் கூட்டமைப்பு நாடுகள் கடந்துவர வேண்டும். அப்படிச் செய்தால்மட்டுமே அமைதியான, வளமான, பாதுகாப்பான தெற்காசியாவை நாம் காண முடியும் என்றாா் அவா்.

வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சு, பாகிஸ்தானை மறைமுகமாகக் குற்றம்சாட்டுவதாகவே அமைந்திருந்தது.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதை இந்தியா பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சாா்க் கூட்டமைப்பு மாநாட்டில், தெற்காசிய நாடுகளுக்கு இடையே போக்குவரத்தை மேம்படுத்த சாலை வசதி ஒப்பந்தம், மோட்டாா் வாகன ஒப்பந்தம் ஆகிய மின்வசதியை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்களை இந்தியா முன்மொழிந்தது. ஆனால், அந்த ஒப்பந்தங்களுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்காததால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சாா்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கும் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது. ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வுகாணாமல் வா்த்தக உறவு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த மூன்று விஷயங்களையும் முன்னிறுத்தியே பாகிஸ்தானை ஜெய்சங்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.

பாகிஸ்தானுக்கு கண்டனம்:

மற்றொரு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் பிரச்னையை பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு ஜெய்சங்கா் கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com