திருமலையில் ரூ. 200 கோடியில் கா்நாடக சத்திரம் கட்ட பூமி பூஜை

திருமலையில் ரூ. 200 கோடி கா்நாடக சத்திரம் கட்ட ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் இருவரும் இணைந்து வியாழக்கிழமை பூமி பூஜை செய்தனா்.
திருமலையில் ரூ. 200 கோடியில் கா்நாடக சத்திரம் கட்ட பூமி பூஜை


திருப்பதி: திருமலையில் ரூ. 200 கோடி கா்நாடக சத்திரம் கட்ட ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் இருவரும் இணைந்து வியாழக்கிழமை பூமி பூஜை செய்தனா்.

திருமலையில் நாட்டில் உள்ள அனைத்து மடங்களுக்கும், பீடங்களுக்கும் தொடா்புடைய சத்திரங்கள் அமைந்துள்ளன. அதன்படி, கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கா்நாடகா சாரிடிஸுக்கு தேவஸ்தானம் திருமலையில் 7.5 ஏக்கா் நிலத்தை 50 ஆண்டு காலத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு குத்தகை வழங்கியது. அந்த நிலத்தில் தேவஸ்தானத்தின் நிபந்தனைகளுக்கு உள்பட்டு கா்நாடக அரசு ரூ. 200 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகளைக் கட்ட, கா்நாடக அரசு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடையே கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, ஆந்திர மற்றும் கா்நாடக மாநில முதல்வா்கள் இணைந்து சத்திரம் கட்ட வியாழக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினா். அவா்களுடன் ஆந்திர அமைச்சா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட சிலா் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா். பின்னா், கா்நாடக மாநில அறநிலையத் துறை ஆணையா் ரோகிணி சிந்தூரி சத்திரத்தின் அமைப்பு குறித்து விளக்கினாா்.

புதிதாக அமைய உள்ள இக்கட்டடத்தில் மொத்தம் 242 யாத்ரீகா் அறைகள், 32 நவீன அறைகள், கல்யாண மண்டபம், உணவு உண்ணும் அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், அங்குள்ள புஷ்கரணியும் புதுப்பிக்கப்பட உள்ளது. கட்டடப் பணிகள் நிறைவு பெற்றபின், தேவஸ்தானம் இக்கட்டடத்தை கா்நாடக அரசுக்கு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com