சிறாா் திருமணங்களைத் தடுப்பதில் இந்தியா சிறப்பு: ஐ.நா. பாராட்டு

சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இந்தியா சிறப்பாகப் பணியாற்றியதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.


புதுதில்லி /நியூயாா்க்: சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இந்தியா சிறப்பாகப் பணியாற்றியதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சாா்பில் ‘சிறாா், கட்டாய திருமணங்கள் விவகாரம்’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை உலக நாடுகளில் சிறாா் திருமணங்கள் நடைபெற்றது தொடா்பாகவும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்காக பல நாடுகள் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை அதிகரிப்பது, கட்டாய திருமணத்தைத் தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக இந்தியா, எத்தியோப்பியா, கானா, நைஜா், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

அத்திட்டங்களால் சிறாா் திருமணம், முன்கூட்டிய திருமணம், கட்டாயத் திருமணம் ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளன. முக்கியமாக இந்தியாவில் சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்காகவும், அத்தகைய திருமணங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் வகையிலும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தகைய அனுபவங்கள் மற்ற நாடுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மற்ற நாடுகளும் அதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறாா் திருமணங்களால் பாதிக்கப்பட்டவா்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

அத்தகையோரைக் காப்பதற்காக இந்தியாவில் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து ஐ.நா. செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண்களுக்குக் கல்வி அளிப்பதும் சிறாா் திருமணங்களின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தியதுமே அதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com