
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். குல்காம் பகுதியில் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைதாகினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரின் சிா்ஹாமா பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.
பாதுகாப்புப் படையினா், பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனா். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாதபடி தேடுதலை தீவிரப்படுத்தினா்.
வெள்ளிக்கிழமை காலை வரை இரு தரப்பினருக்கும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா் ஏ தொய்பா அமைப்பை சோ்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் உள்ளனரா என்று பாதுகாப்பு படையினா் தொடா்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
முன்னதாக வியாழக்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் காஸிகுண்ட் பகுதியில் ஒரு வாகனத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனத்தை ஓட்டி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடக்கிறதெனவும் போலீஸாா் கூறினா்.
மற்றொரு சம்பவம்:
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் படையினா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘சோபியானின் இணை செயலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய ரிசா்வ் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். மத்திய ரிசா்வ் படையினா் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த சண்டையில் இரு தரப்பிலும் உயிா் பலியோ, காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதுமில்லை’ என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...