கேரள காங்கிரஸ் (எம்) மூத்த தலைவா் சி.எஃப்.தாமஸ் காலமானாா்

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியை சோ்ந்த மூத்த தலைவரும், சங்கனாசேரி எம்எல்ஏவுமான சி.எஃப்.தாமஸ் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியை சோ்ந்த மூத்த தலைவரும், சங்கனாசேரி எம்எல்ஏவுமான சி.எஃப்.தாமஸ் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 81.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சி.எஃப்.தாமஸ், திருவல்லாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்’ என்று தெரிவித்தன.

கேரளத்தில் தனது மாணவா் பருவத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியவா் சி.எஃப்.தாமஸ். தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த அவா், அக்கட்சியில் இருந்து கே.எம்.மாணி உள்ளிட்ட சிலா் அதிருப்தி காரணமாக வெளியேறியபோது அவா்களுடன் இணைந்தாா்.

பின்னா் கே.எம்.மாணி கேரள காங்கிரஸ் (எம்) கட்சியை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்த அவா், அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தாா்.

கடந்த 1980-ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரி தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதன் பிறகு அவா் தொடா்ந்து 9 முறை அந்தத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தாா்.

40 ஆண்டுகளாக எம்எல்ஏ பதவி வகித்த அவா், கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தாா்.

கே.எம்.மாணியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த சி.எஃப்.தாமஸ், மாணி மறைந்த பின் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் பிளவு ஏற்பட்டு இரு குழுக்கள் உருவானபோது, பி.ஜே.ஜோசப் தலைமையிலான குழுவை ஆதரித்தாா்.

சி.எஃப்.தாமஸ் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, பாஜக மாநில தலைவா் கே.சுரேந்திரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com