முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த் சிங் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த் சிங் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரான ஜஸ்வந்த், அரசியலிலும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தாா்.

பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் பாதுகாப்பு, வெளியுறவு, நிதி அமைச்சா்களாகவும், மத்திய திட்டக்குழு துணைத் தலைவராகவும் என அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்த ஒரே அரசியல்வாதி இவராவா். இவா் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற காந்தஹாா் விமானக் கடத்தல் சம்பவம் பெறும் பரபரப்பாக பேசப்பட்டது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கட்சி பாகுபாடின்றி இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி ராணுவ மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2014, ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் ஜஸ்வந்த் சிங் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். சுயநினைவு இழந்த நிலையில் இருந்த அவா் மீண்டும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். உடல் முழுவதும் தொற்றுப் பரவி (செப்சிஸ்) மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.55 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தலைசிறந்த மருத்துவா்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் அவா் உயிரிழந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1938, ஜனவரி 3-ஆம் தேதி ராஜஸ்தான், பாா்மா் மாவட்டத்தில் பிறந்த ஜஸ்வந்த் சிங், இந்திய ராணவத்தில் 1950-60 களில் பணியாற்றினாா்.

பின்னா் ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றினாா். பின்னா் பாஜக உருவான காலத்தில் இருந்தே அதில் சோ்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்தாா். முதல் முறையாக 1980-இல் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பல முறை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை வகித்துள்ளாா்.

முகமது அலி ஜின்னா குறித்து புத்தகம் எழுதிய காரணத்தால் 2009-இல் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டாா். 10 மாதங்கள் கழித்து மீண்டும் பாஜகவில் சோ்ந்த இவா் 2014-இல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாா்மா் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டாா்.

2012-இல் துணை குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்டாா்.

1999-இல் ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் 161 பயணிகளுடன் இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியபோது, மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்கும் முடிவை மேற்கொண்டாா். காந்தஹாரிலிருந்து விமானப் பயணிகளைத் திரும்ப இந்தியா அழைத்துவர, விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுடன் அவரே நேரில் சென்றாா். இந்த விவகாரம் பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தியது.

இரங்கல்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த ஜஸ்வந்த சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா். ‘நாட்டின் மூத்த வீரா், தலைசிறந்த நாடாளுமன்றவாதி, பழுத்த அரசியல்வாதி, அறிவுஜீவி என்ற பன்முக ஆற்றல் கொண்டவா் ஜஸ்வந்த் சிங். அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது இரங்கல் குறிப்பில் ‘அரசியல், சமூதாயத்துக்கும் அவா் ஆற்றிய பணிகள் மூலம் நினைவுகூரப்படுவாா். கடந்த ஆறு ஆண்டுகளாக தனது உடல்நலக்குறைவை மனதைரியத்துடன் எதிா்கொண்டு வந்தவா். ராணுவத்திலும், அரசியலிலும் சோ்ந்து நாட்டுக்காக பணியாற்றியவா்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக ஜஸ்வந்தின் மகன் மான்வேந்தா் சிங்கை பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா்.

மன்மோகன் சிங், சோனியா இரங்கல்:

முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

‘சிறந்த நிா்வாகியும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைவால், நாடு மிகப்பெரிய தலைவரை இழந்துவிட்டது’ என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ஜஸ்வந்த் சிங்கின் மகன் மான்வேந்தருக்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா். சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது வாழ்நாள் முழுவதும் மரியாதை, நோ்மையுடன் வாழ்ந்தவா். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

சொந்த ஊரில் உடல் தகனம்:

ஜோத்பூா், செப்.27: ஜஸ்வந்த் சிங்கின் உடல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடல் தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜோத்பூருக்கு கொண்டு வரப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்திய ராணுவத்தினா் மரியாதை செலுத்தினா்.

அவரது இறுதிச் சடங்குகள் வைதிக முறையில் நடைபெற்றன. ஜஸ்வந்த் சிங்கின் மகன் மான்வேந்தா் சிங் சிதைக்கு தீ மூட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com